Home Tretises on Thevaram Saivaite way of Living
| How Vishnu Idol came to be at Chidambaram? | |
செந்தமிழ்
நூல்களிலும் வடமொழி நூல்களிலும் தில்லைப் பெருங்கோயில்
சைவசமயத்தார்க்குச் சிறப்புரிமையுடைய தலைமைக கோயிலாகவே போற்றப்
பெற்றுள்ளது. வியாக்கிர பாதராகிய புலிக்கால் முனிவர்
திருமூலட்டானப் பெருமானை வழிபட்டுப் போற்றினமையால் பெரும்
பற்றப்புலியூர் எனவும், தில்லைவனமாகிய இத்திருத்தலத்திலே
பதஞ்சலி முனிவர் செய்த தவத்திற்கு அருள்கூர்ந்து எல்லாம் வல்ல
சிவபெருமான் ஞான மயமான அம்பலத்திலே ஆன்ந்தக் கூத்து
நிகழ்த்தியருளுதலால் தில்லைச் சிற்றம்பலம் எனவும் வழங்கப்
பெறுவது இத்தில்லைப் பெருங் கோயிலாகும். திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத்
திருப்பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
திருச்சிற்றம்பலக் கோவை யாகிய அருள் நூல்களும் திருமூலர்
திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் ஈறாகவுள்ள ஏனைய
திருமுறைகளும் தில்லைச்சிற்றம்பலத்தையே சிவ
தலங்களெல்லாவற்றிலும் முதன்மையுடையதாகக் கொண்டு கோயில், என்னும்
பெயராற் சிறப்பித்துப் போற்றியுள்ளன. சேரசோழ பாண்டியர்களாகிய
தமிழ் வேந்தர் ஆட்சியிலும் இடைக்காலத்தில் வந்த பல்லவ மன்னர்கள்
ஆட்சியிலும் பிற்காலத்தில் வந்த விசயநகரமன்னர் நாயக்க மன்னர்
மராட்டிய மன்னர் ஆட்சியிலும் தில்லைப் பெருங்கோயில் கூத்தப்
பெருமானுக்குரிய திருக்கோயிலாகவே கல்வெட்டுக்களிற் குறிக்கப்
பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் ஆட்சியுரிமைகல் அனைத்தும்
சிவனடியார்களாகிய மாகேஸ்வரர்களுக்கும் கோயிலில் ஸ்ரீ
காரியமாகிய அகத்தொண்டு புரிந்து வரும் தில்லை வாழந்தணர்
முதலியோர்க்கும் கோயில் நாயகஞ் செய்வார் ஆகிய
அரசியலதிகாரிகட்கும் சமுதாயஞ்செய்வாராகிய ஊர்ப்
பொதுமக்களுக்கும் உரியனவாகக் கோயிலில் வரையப் பெற்ற
கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன. சிதம்பரம் நடராசர்
கோயிலில் வரையப் பெற்றுள்ள 270க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில்
இக்கோயில் உடையார் திருச்சிற்றம்பலமுடையராகிய
பொன்னம்பலவாணர்க்குச் சிறப்புரிமையுடைய திருக்கோயிலாகக்
குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.
இவ்வாறு சைவ சமயத்தார்க்கே
சிறப்புரிமை வாய்ந்த சிதம்பரம் நடராசப் பெருமான்
திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் எப்பொழுது
பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதும் இக்கோயிலில் வைஷ்ணவர்களுக்கு
எத்தகைய உரிமையுண்டு என்பதும் வரலாற்று முறையில் நோக்குவது
இக்கோயிலின் அமைதியான நடைமுறைக்கு மிகவும் உறுதுணை
செய்வதாகும்.
தேவார ஆசிரியர் மூவர் காலம்
வரையிலும் தில்லைப்பெருங்கோயிலில் கோவிந்தராசப்பெருமாள்
சந்நிதி இடம்பெறவில்லை. சிதம்பரம் சபாநாயகர் திருக்கோயிலில்
கோவிந்தராசப்பெருமாளை முதன் முதற் பிரதிஷ்டை செய்தவன்
கி.பி.726 முதல் 775 வரை ஆட்சிபுரிந்த நந்திவர்மபல்லவன் ஆவன்.
இச்செய்தி திருச்சித்திரகூடத்தைப் போற்றித் திருமங்கை யாழ்வார்
பாடியருளிய பெரிய திருமொழியாற் புலனாகின்றது.
"பைம் பொன்னும் முத்தும்
மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி
3-2-3)
எனத் திருமங்கையாழ்வார் பாடிப்
போற்றுதலால் தில்லைப் பெருங்கோயிலிலுள்ள கோவிந்தராசப்பெருமாள்
சந்நிதி நந்திவர்ம பல்லவனால் முதன்முதல் அமைக்கப்பெற்றதென்பது
நன்கு புலனாகும். இச்சந்நிதி தில்லைக் கூத்தப்பிரான்
திருமுற்றத்தில் சிறிய திண்ணையளவில் தான் முதன் முதல்
நிறுவப்பெற்றிருந்தது என்பது தில்லைத் திருச்சித்திரகூடம் என்ற
பெயரால் தெளியப்படும். 'சித்திரகூடம் தெற்றியம்பலம்' என்பது
திவாகாரம், தெற்றி - திண்ணை, எனவே திண்ணையளவிலமைந்த சிறிய
இடத்திலேயே நந்திவர்மபல்லவன் கோவிந்தராசப்பெருமாளைப் பிரதிஷ்டை
செய்தான் என்று தெரிகின்றது.
சிவனைத் தொழுகுலமாகப் பெற்று
அம்முதல்வனது ஊர்தியாகிய இடபத்தினை இலச்சிணையாகக் கொண்டவர்கள்
பல்லவ மன்னர்கள். அத்தகைய பல்லவமரபிலே தோன்றிய
நந்திவர்மபல்லவன் தன் ஆட்சியின் முற்பகுதியில் சைவ வைணவ
சமயங்களிற் சமநோக்குடையனாக விளங்கினான். இவன் மங்கையாழ்வாரது
தொடர்பினால் பரமவைணவனாக மாறி விட்டான். "முகுந்தன்
திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை"
எனத்த்ண்டந்தோட்டப் பட்டயம் இம்மன்னனைப் பற்றிக் கூறுதலால்
இவன் வைணவனாக மாறிய செய்தி நன்கு புலனாகும். இவன் பரம வைணவனாக
மாறிய பின்பே தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயில் முற்றத்திற்
கோவிந்தராசப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனன் என்று தெரிகிறது.
தில்லைத்
திருச்சித்திரகூடத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்ற கோவிந்தராசப்
பெருமாளை முறைப்படி பூசை செய்து வந்தவர்கள் தில்லை மூவாயிரர்
எனச் சிறப்பித்துரைக்கப்படும் தில்லைவாழந்தணர்களேயாவர்.
இங்குள்ள பெருமாள் திருவுருவம் நடராசர்கோயிலைச் சார்ந்த
சுற்றுக்கோயில் தெய்வம் (பரிவாரதெய்வம்) என்ற அளவிலேயே
தில்லைவாழந்தணர்களால் முறைப்படி பூசனை செய்யப்பெற்று வந்தது.
இவ்வாறே காஞ்சிநகரில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பரிவார
தெய்வமாக எழுந்தருளியுள்ள பெருமாளை 'நிலாத்திங்கள்
துண்டத்தான்' எனத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்திருப்பதும் இங்கு எழுந்தருளிய பெருமாளைப் பூசனை செய்யும்
உரிமையினை இக்கோயிற் பூசை முறையினராகிய ஆதி சைவக் குருக்கள்
இன்றளவும் மேற்கொண்டிருப்பதும் இங்கு நினைத்தற்குரியதாகும்.
தில்லைக் கோவிந்தராசப்பெருமாள் பிரதிஷ்டை பற்றியும்
ஆதியிலிருந்த பூசைமுறைபற்றியும் ஆராய்ச்சி யறிஞர் மு
இராகவையங்கார் அவர்கள் 'திருச்சித்திரகூடம் என்னும்
ஆராய்ச்சிக் கட்டுரையில் பின் வருமாறு கூறியுள்ளார்:-
திருமங்கைமன்னன்
"பைம் பென்னும் முத்தும் மணியுங்
கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன் பணிந்த -தில்லைத் திருச்சித்த்ரகூடம்" (பெ.தி. 3-2-3)
என்று பாடுகின்றார். இதனால் பல்லவ
வேந்தனொருவனால் ஆதியில் அபிமானிக்கப்பட்டது.
இத்திருமால்கோயில் என்பது தெரியவரும்.
"பல்லவன் மல்லையர் கோன்பணிந்த
பரமேச்சுர விண்ணகரம்"
"நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணக ரம்" (பெ-தி 5-10-7) "கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்" (6,6,5,9)
எனப் பண்டையரசர்கள் திருப்பணிசெய்து
வணங்கிய தலங்களை இவ்வாறே ஆழ்வார்கள் பாடியிருத்தல் காணலாம்.
'பணிந்த கோயில்' முதலியன,
பணிசெய்து பிரதிஷ்டித்த கோயில் என்ற பொருளில் முன்பு வழங்கியவை
என்பது மேற் காட்டிய ஆழ்வார்கள் வாக்குகளினின்றும்
அறியப்படும்.
பல்லவர்கோனால் பணிசெய்து
வழிபடப்பட்டது இத்திருசித்திரகூடம் என்று கருதுதல் பொருந்தும்,
இங்ஙனம் பணிந்த பல்லவனாகத் திருமங்கையாழ்வாராற் புகழப்பட்டவன்
அவர் காலத்தே பரம வைஷ்ணவனாக விளங்கிய இரண்டாம் நந்திவர்மனாகச்
சொல்லலாம்.
இச்சித்திரகூடத் திருமாலை
முற்காலத்தில் முறைப்படி ஆராதித்து வந்தவர்கள்
தில்லைமூவாயிரவரேயாவர்.
"மூவாயிரநான் மறையாளர் முறையால்
வணங்க
- தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)
"தில்லைநகர்த் திருச்சித்திர
கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்ற ஆழ்வார்கள் வாக்குக்களால் இது
தெரியவருகின்றது. இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும்,
தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படிபுரிந்து
வந்தவர்கள் தில்லைமூவாயிரவர் என்பது விளக்கமாம்" (சென்னைப்
பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III
(1938-39) பகுதி I)
எனச்சிறந்த ஆராய்ச்சியாளரும்
வைஷ்ணவருமான ராவ்சாகேப் மு. இராகவையங்காரவர்கள்
காய்தலுவத்தலகற்றி நடுநின்று கூறிய ஆய்வு முடிவுகள் அறிஞர்களது
பாராட்டுக்கு உரியனவாகும்.
தில்லைப் பெருங்கோயிலில்
இடைக்காலத்தில் நந்திவர்மபல்லவனால் பிரதிட்டைசெய்யப்பெற்ற
கோவிந்தராசப்பெருமாளுக்குச் சைவசமயத்தவராகிய தில்லைமூவாயிரவர்
பூசை செய்து வருவதனைக் கண்டு மனம் பொறுக்காத பிற்கால
வைஷ்ணவர்களிற் சிலர் சிறுகச் சிறுகத் தில்லைத்
திருச்சிற்றம்பலக் கோயில் நடைமுறைகளுக்குத் தொல்லையுண்டாக்கி
வந்தனர். அவர்களாற் செய்யப்பட்டுவரும் தொல்லைகள் நாளுக்கு
நாள் அதிகரித்தன. அவற்றால் தில்லைச்சிற்றம்பலத்
திருப்பணிகளும் நாட்பூசனைகளும் தடைப்படுவனவாயின. அதுகண்டு
மனம் பொறாத
இரண்டாங்
குலோத்துங்க சோழன் இவ்வைணவர்கள்
செய்யும் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு காரணமாகவுள்ளது
கோவிந்தராசப்பெருமாள் மூர்த்தமேயென எண்ணி அதனைத் தில்லைப்
பெருங்கோயிலினின்றும் அப்புறப்படுத்தினன் என்பதனை இவனுடைய
அவைக்களப் புலவராகிய கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
தாம்பாடிய உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாங் குலோத்துங்கன்
தில்லைக்கோயிலினின்றும் திருமால் மூர்த்தத்தை அப்புறப்படுத்திய
இச்செயலைப் பிற்காலத்தில் வைணவர்களால் எழுதப்பட்ட
திவ்யசூரிசரிதம், கோயிலொழுகு முதலான நூல்கள்
மிகைப்படுத்திக்கூறி இவ்வேந்தன் மீது அடாத பழிகளைச்
சுமத்தியும், கிருமிகண்ட சோழன் என இவனை இழித்துக் கூறியும்
உள்ளன. இந்நூல்களில் இவ்வேந்தனைக் குறித்துக்
கூறப்படுவனவெல்லாம் வெறுங் கற்பனைக் கதைகளே; உண்மையாவன அல்ல
என்பது வரலாற்றாசிரியர்கள் துணிபாகும். (பிற்காலச் சோழர்
சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96
பார்க்க).
இரண்டாங் குலோத்துங்கன்
ஆட்சிக்காலத்தில் தில்லைக் கோயிலிலிருந்து
அப்புறப்படுத்தப்பட்ட கோவிந்தராசப்பெருமாள் திருவுருவத்தை
இராமாநுசர் கீழைத் திருப்பதியிற் கொண்டு சேர்த்து அங்கே
பிரதிட்டை செய்தார் என இராமாநுஜ திவ்ய சரிதை கூறுகிறது.
இராமாநுசரால் பிரதிட்டை செய்யப்பட்ட திருவுருவம் இன்றும்
அங்கேயுள்ளதென்பதும், இப்போது சிதம்பரம் கோயிலிலுள்ள
கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் விசயநகர அரசர் அச்சுதராயர்
காலத்தில் புதிதாகப் பிரதிட்டை செய்யப்பட்டதென்பதும் வரதராஜ
ஐயங்கார் பாடிய பாகவதபுராணத்தில் திருவரங்கப்படலத்திலுள்ள 63,
99 ஆம் செய்யுட்களால் நன்குபுலனாகும். எனவே இரண்டாங்
குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலமாகிய கி.பி. பன்னிரண்டாம்
நூற்றாண்டிற்கும் அச்சுதராயர் ஆட்சிக்காலமாகிய கி.பி.பதினாறாம்
நூற்றாண்டிற்கும் இடைப்பட்டகாலத்திலே சிதம்பரம்
நடராசப்பெருமான் கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் மூர்த்தம்
இல்லையென்று தெரிகிறது. கி.பி. 1251 முதல் 1271 வரை
ஆட்சிபுரிந்தவரும் சைவ வைணவசமயங்கள் இரண்டினையும் ஒப்ப
மதித்துப் போற்றியவரும் 'ஆமுத்தமால்யதா' என்னும் நூலை இயற்றி
நாச்சியாராகிய ஆண்டாளைப் போற்றியவரும் வைஷ்ணவரும் ஆகிய விசயநகர
மன்னர் கிருஷ்ணதேவராயர் கி.பி. 1516-இல் பொட்டனூரில் தாம்
பெற்ற வெற்றிக்கு அடையாளமாகத் தில்லை நடராசப்பெருமான்
திருக்கோயிலின் வடக்குக் கோபுரத்தைக்கட்டி முடித்துப்
பொன்னம்பலவாணர்க்கு நிலம் வழங்கியுள்ளார் (தெ.இ.க தொகுதி VII
எண் 199) இதனை யுற்று நோக்குங்கால் கிருஷ்ணதேவராயர் காலத்தில்
கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியில்லையென்பதும், தில்லைப்
பெருங்கோயில் பொன்னம்பல நாதராகிய சிவபெருமானுக்கே சிறப்புடைய
திருக்கோயில் என்னும் கருத்துடையவர் கிருஷ்ணதேவராயர் என்பதும்
நன்கு விளங்கும்.
கிருஷ்ணதேவராயருக்குப் பின்
கி.பி. 1529-இல் பட்டத்துக்கு வந்த அச்சுததேவராயர் கி.பி 1539-
இல் தில்லை நடராசர் கோயிலில் கோவிந்தராசப் பெருமானை மீண்டும்
பிரதிஷ்டை செய்து வைகாநச சூத்திரத்தின்படி பூசை நடக்க 500 பொன்
வருவாயுள்ள நான்கு கிராமங்களின் வரியை நீக்கிக்
கொடுத்துள்ளார். இவர் பெருமாளை மீண்டும் பிரதிட்டை செய்த இடம்
முற்காலத்தில் நந்திவர்மபல்லவன் பிரதிட்டை செய்திருந்த
திண்ணையளவாகிய சிறிய இடமே என்பது இங்குக்
கவனித்தற்குரியதாகும். ஆயினும் இங்கு எழுந்தருளுவித்த
பெருமாளைப் பூசிக்க வைஷ்ணவர்களை நியமித்தமையால் பெருமாளை
வழிபாடு செய்யும் உரிமையை அரசன்வழியாகப் பெற்ற அவ்வைணவர்கள்
மெல்லமெல்லத் தங்களுக்குரியனவாக நடராசர் கோயிலிடங்களை வலிதிற்
கைப்பற்றிக்கொள்ள முயன்று வந்தார்கள். வேங்கடபதி தேவமகாராயர்
ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாகச் செஞ்சியிலிருந்து
ஆட்சிபுரிந்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயகன் என்னும் அதிகாரி
வைணவர் முயற்சிக்கு உடந்தையாய்க் கி.பி 1597 இல் நடராசர்
கோயில் முதற் பிராகாரத்திலேயே கோவிந்தராசப் பெருமாளுக்குத்
தனிக்கோயிலை அமைக்கத் தொடங்கினான். இந்நிலையில் தில்லைப்
பெருங்கோயிலின் பூசையுரிமையைத் தொன்று தொட்டுப் பெற்றுடையராகிய
தில்லைவாழந்தணர் களும் நகரப் பொது மக்களும்
நடராசப்பெருமானுக்கேயுரிய இக்கோயிலில் பெருமாளுக்கெனப்
புதிதாகத் தனிக்கோயில் கட்டுதல் வேண்டாம் எனவும் இரண்டாம்
பிராகாரத்தில் முன்னிருந்த இடத்திலேயே பெருமாளுக்குப் பூசை
நிகழச் செய்தலே பொருத்தமாகும் எனவும் அவ்வதிகாரியை எவ்வளவோ
முறை நயந்து கேட்டார்கள். கொண்டது விடாக் கொண்டம நாயக்கனாகிய
அவ்வதிகாரி அவர்களது வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல்
கோவிந்தராசர் சந்நிதியைப் பொன்னம்பலவாணர் சந்நிதிக்கு மிகவும்
அருகிலேயே அமைக்கத் தொடங்கினான். அந்நிலையில் தில்லை
வாழந்தணர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் அவ் வன்செயலைத்
தடுத்து நிறுத்த உறுதி பூண்டனர்; தாங்கள் உயிரோடிருக்கும்வரை
நடராசர்கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராசப் பெருமாள் கோயில்
கட்டுதற்கு இணங்க மாட்டோம் என்று சொல்லி ஒருவர் பின் ஒருவராகக்
கோபுரத்தின் மேலேறிக் கீழே வீழ்ந்து உயிர்விடுவாராயினர்.
இவ்வாறு இருபது பேர்வரை தற்கொலை செய்து கொண்ட
துன்பக்காட்சியைத் தன் கண்களாற் கண்டும் மனமிரங்காத கொண்டம
நாயக்கன் கோபுரத்தின் மேலேறித் தற்கொலை செய்ய
முந்துபவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளும்படி உத்தரவிட்டான்,
அதன்படி தில்லை வாழந்தணர் இருவர் சுடப்பட்டு இறந்தனர்.
இத்துன்ப நிலையைப் பொறுக்கலாற்றாது தில்லைவாழந்தணர்
குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார் ஒருவர் தமது கழுத்தையறுத்துத்
தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு அரசாங்க
அதிகாரியொருவனது சமயப் பிடிவாதங்காரணமாகச் சிதம்பரம்
கோயிலுக்குள்ளே இத்துன்பச் செயல்கள் நிகழ்ந்த நாளில் மேலை
நாட்டிலிருந்து யாத்திரை காரணமாகத் தமிழ் நாட்டிற்குச்
சுற்றுப்பயணஞ் செய்த பீமெண்டா (
Jesevit Father N.
Pimenta) என்னும்
பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற்
கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக்
குறிப்பிலும் குறித்துள்ளார்.1
இந்நிகழ்ச்சியை யுணரும் நல்லறிவுடையோர் எவரும் கண்ணீர் விட்டு
வருந்துவர் என்பது திண்ணம்.
The Aravidu Dynasty by
Father Heras (P. 553)
1. A notable instance of the struggle
between the two sects is the lamentable event that took
place at Chidambaram in 1957 A.D. While Krishnappa Nayaka
of Jinji, himself a Stauch Vaishnava was there
superintending the improvements which he had ordered at the
temple of Govinda Raja within the great Saiva Temple.
Father N. Pimenta, who passed through Chidambaram at this
time narrates in one of his letters that on this occasion a
great controversy arose as to "Whether it were lawful to
place the signe of Perumal in the temple at Chidambaram.
Some refused, others by their legates importunatly urged and
the Naiks of Gingee decreed to erect in the temple" These
last words of pimenta indicate that after the restoration of
the idol to the temple by Rama Rayan it had again been
removed and its shrine probably destroyed. In order to
re-instal it with due honour, Krishnappa Nayaka ordered the
old shrine to be reparied and even perhaps enlarged'
This was the cause of the whole trouble.
"The priests of the Temple which were the Treasuries"
Continues, pimenta (were) with standing, and threatining if
it were done, to cast down themselves from the top. The
Brahmanes of the temple swore to do the like after they
buried the former, which yet after better advice they
performed not". But Krishnappa Nayaka was unmoved by any
such threat when the reconstruction of the shrine was
carried on with out hesitation where upon the priests
climbing one of the high Gopurams of the temple started to
cast themselves down while the Nayak was in the temple,
"About twenty has perished in that precipitation on that day
of our departure, whereat the Naichus angry, caused his
gunners to shoot at the rest which killed two of them. A
woman also was so shot in this Zealous quarrel that she cut
her own throat". Naturally Krishnappa Nayaka accomplished
his purpose inspite of this opposition.
நந்திவர்மபல்லவன் திருமால்
மூர்த்தத்தைத் தில்லைக்கோயிலில் பிரதிஷ்டை செய்த காலத்தில்
அத்திருமேனி திண்ணையளவாக அமைத்த சிறிய இடத்திலே தான் வழிபடப்
பெற்றது. பின் நானூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயர்
பிரதிஷ்டைசெய்ததும் அதே இடத்தில் தான். சமயவெறி பிடித்த வையப்ப
கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் என்பான் கி.பி 1597-இல்
முன்னிருந்த அத் தெற்றியம்பலத்தளவில் நில்லாது நடராசர்
சந்நிதிமுகப்பிலுள்ள இடத்தையும் சேர்த்துக் கொண்டு கோவிந்த
ராசப் பெருமாளுக்குத் தனிக் கோயில்கட்டிவிட்டான். இந்த
வம்புகளுக்கெல்லாம் காரணம் வைஷ்ணவத்தை எங்கும் பரப்ப
வேண்டுமென்று முயன்ற விசயநகர அரசர்களும் அவர்களுக்கு துணைநின்ற
அவர்களுடைய குரு தாதாசாரியாரும் ஆவர் என்று அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்து
காலஞ்சென்ற c.s.சீனிவாசாசாரியார்
அவர்கள் மனம் வருந்தி எழுதியுள்ளார்கள்.
கிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின்
விசயநகர மன்னனாகிய சீரங்கராயன் - III கி.பி. 1643-இல்
தில்லைகோவிந்தராசர் சந்நிதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி முன்பு
இல்லாத புண்டரீகவல்லித்தாயார் சந்நிதி முதலிய புதிய
சந்நிதிகளையும் தில்லைக்கோயிலில் அமைத்தான். இவர்களுடைய மதவெறி
காரணமாகத் தில்லைநடராசர் கோயிலிற் பழைமையாக இருந்த
சிவசந்நிதிகள் இடிக்கப்பட்டு மறைந்துபோயின. இவ்வாறு
வைஷ்ணவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தில்லைக்கோயிலின்
பெரும்பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளும் முயற்சியில்
ஈடுபடுவாராயினர். அதனையுணர்ந்த தில்லைநகரச் சைவப் பெருமக்களும்
தில்லைவாழந்தணர்களும் கொதித்தெழுந்து தில்லைக்கோயிலில்
கோவிந்தராசப்பெருமாளுக்கு னின் இடமில்லையென்று கூறும் அளவுக்கு
பெருமாள் சந்நிதியையே அப்புறப்படுத்தும் முயற்சியில்
ஈடுபடுவாராயினர். அந்நிலையில் கோவிந்தராசப்பெருமாள் பூசை
முறையினைக் கண்காணிக்கும் உரிமையுடைய வைஷ்ணவர்கள் கி.பி. 1862
இல் தில்லைப் பெருங்கோயில் பூசை முறை உரிமையாளராகிய
தில்லைவாழந்தணர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய
இன்றியமையாமை உண்டாயிற்று. சிதம்பரம் கோவிந்தராசப்பெருமாள்
பூசை முறையைக் கவனிக்கும் உரிமையுடைய வைஷ்ணவர்கள்
தில்லைவாழந்தணர்கட்கு எழுதிக் கொடுத்த உடன்படிக்கையில் தாங்கள்
கோவிந்தராசப் பெருமாளுக்குச் செய்து வரும் நித்தியபூசைகளைத்
தவிர வேறு பிரமோற்சவம் நடத்துவதில்லையெனவும், தில்லையில்
நடராசப்பெருமானுக்குத் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் நித்திய
பூசைகளிலும் திருவிழாக்களிலும் தாம் தடையாக இருப்பதில்லையெனவும்
ஒப்புக்கொண்டு உறுதி கூறியுள்ளார்கள். இவ்வுறுதியின் பேரில்
கி.பி. 1867 இல் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.
(தில்லைப் பெருங்கோயில் வரலாறு
என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது)
திருச்சிற்றம்பலம்.
|