Home            DK, Periyar - part 2        Meaning of Viboothi or Thiruneeru


On Atheism, Dravidar Kazagam, Periyar
Suyamariyathai Iyakkam [Self Respect movement]
Suyamariyaathaiyeeka Suravalee

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சுயமரியாதையியக்கச் சூறாவளி
-ஒரு சிவசேவகன்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
 
--------------------------------------------------------------------------------
1. நாத்திகம்

Quick Navigation to more Saivism Links :

--------------------------------------------------------------------------------
அநுவாதம்.
 
    பதி, பசு, பாசம், சுவர்க்கம், நரகம், மறுபிறப்பு, பந்தம், முத்தி முதலியன உளவென்பது ஆத்திகம்.  அவற்றை யில்லை யென்பது நாத்திகம்.  அறிவாராய்ச்சியால் தகர்த்தெறியப்படும் எளிமையிலுள்ளது முன்னையது.  மக்கள் உலகவின்பத்தை நுகர்வதற்கு அது முற்றிலும் இடையூறாயு மிருந்துவருகிறது.  பின்னையதே அறிவாராய்ச்சியிற் சரியெனப்படுவதும் உலக வாழ்க்கைக்குத் துணைபுரிவது மாகும்.
 
ஆசங்கை.
I.   
     1. உம் குழுவினரனைவருமே நாத்திகர் தானா?
     2. அவருட் சம்சய வாதிகளென்போரு மிலரா?
     3. நாத்திகச் சார்பில் நிச்சயவாதிகளாகிய அவர் ஆத்திகச் சார்பு மட்டில் தம்மைச் சம்சயவாதிகளெனச் சொல்லித் திரிவது வஞ்சகமாகாதா?
     4. 'நல்ல தீர்ப்பு' என்னுஞ் சுவடியில் "தமக்குக் கடவுளுணர்ச்சி வேண்டும்", "ஒருவனை தேவனும்" என்ற மனப்பான்மை தேவை.  அருளைமட்டும் கேட்கும் ஆண்டவன் தேவை" என்று உம்.ஸி.என்.ஏ. வேண்டியுள்ளது ஆத்திகமன்றா?
    5. அதனை அவர் உண்மையாகவே உடன்படின் அநீசுரவாதத்தை மறுத்தற்கு அசையாத காரணமொன்றைக் காட்ட மாட்டுவாரா?
    6. பொறிகளோ கரணங்களோ பதி பசு பாசாதிகளை உணரக்கூடியனவா?
    7. அவ்வாத்திகப் பொருள்கள் தம்முள் தொடர்புடையனவென்பது தெரியுமா?
    8. கடவுளுணர்ச்சி வேண்டுமென்ற அவர் பசு பாச முதலிய பிறவற்றை எங்ஙனம் உணர்ந்தார்?
    9. ஈசுரன் உலகை எந்த வுபாதானத்திலிருந்து, எப்படி, யார் பொருட்டு, எவ்வித நன்மையை வழங்கச் சிருஷ்டித்தானென்பது போன்ற விசாரங்களும் அடுக்கடுக்காக நிகழமாட்டாவா?
II.   
    10. உலகம் யாராலும் உண்டாக்கப்பட்ட தன்றென்று நீர் கொள்வதில்லையா?
    11.  ஆயின் நீர் குடியிருக்கும் வீடு ஒருவனாற் கட்டப்பட்ட தன்றா?
    12. அது நீள, அகல, உயரங்களையுடையதாய் வரம்புட்பட்ட இடத்தில் அகப்பட்டுக் கிடப்பதில்லையா?
    13. தூண், கல், மண் முதலியவாகத் தனித்தனி பிரிக்க படுவதில்லையா?
    14.  அதப்படியே யிருந்த போதும், உறுப்புறுப்புக்களாகப் பிரிக்கப்பட்ட போதும் சடவியல்பே யுடையதா யிருப்பதில்லையா?
    15. அங்ஙனம் வரம்புக்குள் அகப்பட்டுக் கிடத்தல், உறுப்புறுப்புக்களாகப் பிரித்து வேறு வேறாக்கப்படுதல், சடமாய்க்கிடத்தல் என்பன அவ்வீடாகிய பொருளிலேயே காணப்படுவன அல்லவா?
    16. குடம், துணி, கட்டில் முதலியவற்றிலும் அவையிலவா?
    17. மக்கள் செய்த எந்தப் பொருளிலும் அம் மூன்றிற் குறைந்த அல்லது முரணிய வேறொன்று காணப்படுமா?
    18.  அந்த பொருளைக் கண்டு அவற்றை அதில் ஆராய்ந்து அது மக்களாற் செய்யப்பட்டதென்று சொல்லிவிட முடியாதா?
    19. ஆகவே செய்யப்பட்டதொரு பொருள் செய்யப்பட்டதேயெனக் காண்பதற்கு அம்மூன்றும் அதன்பாலுள்ள அடையாளங்களென்பதை யறிகிறீரா?
    20. இனி உலகமெனும் பொருள் முதன்முதல் உளதான போது அவ்வுளதாதலை நேரிற் பார்த்தீரா?
    21. அதநாதி யென்பதையும் அங்ஙனமே பார்த்தீரா?
    22. மக்களாற் செய்யப்பட்ட பொருள்களுட் பல நீர் இவ்வுலகில் தோன்றுமுன்னேயே செய்யப்பட்டு உம் காலத்திற் கிடப்பதில்லையா?
    23. அவை செய்யப்பட்டதையாவது நேரிற் பார்த்தீரா?
    24. ஆயினும் அவை மக்களாற் செய்யப்பட்டன்வென்று அம்மூன்றடையாளங்களும் அவற்றிற் கிடப்பன கொண்டு ஊகித்துக் கொள்ள முடியாதா?
    25. உலகத்தின் உற்பத்தியோ அநாதித்தன்மையோ நேரிற் காணப்படாததாயுள்ள உலகமென்னும் பொருளிலும் அம்மூன்றடையாளங்களும் இருப்பதை யறிவீரா?
    26. அதுகொண்டு உலகமும் ஒருவனாற் செய்யப்பட்ட பொருள்தானென்று ஏன் ஊகித்தல்கூடாது?
    27. உலகம் தானே உளதாயிற்றென்பதற்கும், அநாதியென்பதற்கும் வேண்டப்படும் பிரத்தியேக அடையாளங்கள் அதில் உளவாயின் அவை இவையென விளங்கக் கூறுவீரா?
III.   
    28. 'நான் தமிழன், நான் திராவிடன்' என்று நீர் அடிக்கடி மார்தட்டுகிலிரா?
    29. அந்த 'நான்' என்னுஞ் சொல்லுக்குப்பொருள் எது?
    30. உம் தோல், எலும்பு, மயிர், குருதி, நரம்பு, பவ்வீ, சிறு நீர் முதலியவற்றுள் ஒவ்வொன்றும் அதுவா?
    31. அவற்றின் கூட்டமே அதுவா?
    32. உம் 'நான்' ஐ நேரிற் கண்டீரா?
    33. பிறர்க்குக் காட்டுவீரா
    34. காட்டுவேமென்பீராயின் நீர் சாவீரல்லீரா?
    35. அப்பால் நீர் காட்டுவதெப்படி?
    36. 'எனக்குக் காட்டுவீரா?' என்று வினவுகிறவனுடைய 'நான்' ஐயே அவனுக்குக் காட்டுவேமென்பீராயின் அவனை நீர் கொல்வீரல்லீரா?
    37. அப்பால் அவன் காண்பதெப்படி?
    38. நீரும் அவனும் அல்லாத பிறனுடைய 'நான்' ஐ அவனுக்குக் காட்டுவேமென்பீராயின் உம்மிருவரின் பொருட்டும் அப்பிறன் சாக வேண்டுமா?
    39. உம் 'நான்' எந்தப் பொறிக்குப் புலனாகக் கூடியது?
    40. அதெப்பொறிக்கும் புலப்படாதென்பீராயின் வேறெம்முகத்தாலாயினும் ஊகித்து அச்சொற்பொரு ளிதுதானென்று அறுதியிட்டு உம்மவர் யாரேனும் விளக்கியிருக்கின்றனரா?
    41. பலர் பல விளக்கங்கள் தந்திருக்கின்றனரென்பீராயின் அவை தம்முள் முரணாமல் ஒரே படித்தாயிருக்கின்றனவா?
    42. உம்முடைய 'நான்' ஐக் காணவுங் காட்டவும் மாட்டாமலிருந்தும் 'நான் தமிழன்' என்பது முதலியவற்றைக் கூறி மார்தட்டிக் கொள்கிற உம் கூட்டத்தினர்க்கும், ஈசுரனைக் கண்டும் காட்டியும் உள்ளார் போகக் காணாமலுங் காட்டாமலுமிருந்தும் 'ஈசுரன் இருக்கிறான், அவனே உல்கத்தைப் படைத்தான், அவனே எல்லார்க்கும் ஆண்டவன்' என்று பேசுகிற பிற ஆத்திகக் கூட்டத்தினர்க்கும் அறிவில் என்ன வேறுபாடு கண்டீர்?
IV.
    43. அறிவை வளர்த்துக் கொள்ள நீரும் அரும்பாடு படவில்லையா?
    44. ஆனால் உம்மிடம் அறியாமையும் இல்லையா?
    45. அவ்வறியாமை உம்மை எப்போது எப்படிப் பிடித்தது?
V.
    46. நீர் பிறக்குமுன் இவ்வுலகை யறிவீரா?
    47. இது கிடைக்கவேண்டுமென்று உழைத்திருப்பீரா?
    48. இங்குத் தற்செயலாகவே பிறந்திலீரா?
    49. ஆகலின் இவ்வுலகம் உமக்குப் புதையல் போன்றே கிடைத்த தாகாதா?
    50. புதையலைப் பங்கிட்டுக் கொள்வதற்கு உழைப்பதும் ஓர் உழைப்பாமா?
    51. சும்மா கிடைத்த வுலகத்தை விடுவதே உமக்கு நியாயமன்றா?
    52. இன்றேல் உழைப்பவருக்கே உலகம் உரியதென்ற உம் கொள்கையை நீர் விட வேண்டாமா?
VI.
    53. இவ்வுலகம் அறியாமைப் பொருளா? அறிவுப்பொருளா?
A..   
    54. அறியாமைப் பொருளெனின் அறிவுடைப் பொருள்கள் எப்படி உளவாயின?
   55. அறியாமைப் பொருளாகிய உபாதாநத்திலிருந்து அறிவுப் பொருள்களாகிய காரியம் உளதாமா?
    56. ஆமெனின் உபாதாநத்தில் அறிவு சூனியமன்றா?
    57. சூனியம் காரியப்படுமென்று எந்த விஞ்ஞானி சொன்னான்?
    58. உபாதாநத்தில் அறிவு சூக்குமமாயுள்ளதெனின் உலகமே அறிவுப்பொருள் தானென்று கூற ஏன் பதுங்குகிறீர்?
B.
    59. அறிவுப் பொருள்தானெனின் அறிவாகிய வுபாதாநத்திலிருந்து நில, நீர், தீ முதலிய அறியாமைக் காரியங்கள் தோன்றுமா?
     60. அறியாமையும் அவ்வுபாதாநத்திற் சூக்குமமாயுளதெனின் உலகவுபாதாநமானது அறிவு அறியாமைகளின் இயல்பினதென்பதே உமக்குக் கருத்தாதல் வேண்டாமா?
      61. அதுவே கருத்தெனின் அறிவும் அறியாமையும் பகைமைக் குணங்களல்லவா?
      62. அவை ஒரு பொருளுக்கு இயல்புகளாதல் யாங்ஙனம்?
      63.  இரும்பு சடமன்றா?
      64. அச்சட வுபாதாநத்திலிருந்து குடம், சட்டி, குண்டு முதலியவற்றைச் செய்யலாகாதா?
     65. அப்படியே சித்தை உபாதாநமாக வைத்துக்கொண்டு எந்தக் காரியத்தையாவது செய்ய வல்லீரா?
VII.
     66. அறிவானது பிறிதோ ருபாதாநத்திலிருந்து உண்டாகுங் காரியமும், பிறிதொரு காரியத்தை யுண்டாக்கும் உபாதாநமும் அன்றென்பதை யறிவீரா?
       67. அதனால் அது நித்த்ப் பொருளென்பது விளங்குகிறதா?
      68. ஒரு பிறப்பிலேயே மனிதவுடல் வயது ஏற ஏற வேறுபட்டுக்கொண்டே வருகிறதென்பது உடற்கூற்று நூலின் கொள்கையன்றா?
     69. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னிருந்தவுடலும் பின் வளர்ந்த வுடலும் முற்றிலும் வேறாவை யென்பதை அது அங்கீகரிக்கவில்லையா?
    70. அப்படியானால் தீர்க்காயுளுள்ள ஒருவனுக்கு ஒரு பிறப்பிலேயே வேறு வேறு பருவங்களில் வேறு வேறு உடலங்கள் உளவாகின்றன வென்பது சித்தியாதா?
       71. ஆயினும் அத்தனை யுடலங்களிலும் அறிவு தொடர்ந்து வருவது தெரிகிறதா
    72. ஆகவே அழியாத அவ்வறிவுக்கு ஒரு பிறப்பிலேயே பல வுடல்கள் கிடைப்பதை வைத்துக்கொண்டு அப்பிறப்புக்கு முன்னரும் பல பிறப்புக்கள் வந்திருக்கலாம், பின்னரும் வரவிருக்கலாம் என்று ஏன் கருதிக்கோடலாகாது?
      73. முன்னைப் பிறவிகளின் நினைவின்மைக்குக் காரணத்தைக் காண்டலே நீதியன்றா?
    74. ஒரு பிறப்பிலேயே நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலவற்றைப் பின் நினைவின்மையினால் நிகழவேயில்லை யென்பீரா?
      75.  உம் நினைவில் வாராத உம் குழவிப்பருவத்தை யில்லையெனல் உமக்குத் தகுமா?
VIII.
     76. உலக       முழுவதுமே     பொதுவுடைமையாய்   விட்டால்   மக்களனைவரும் பந்தமற்றவராய்விடுவரா?
       77. அப்பால் அவருக்கு விசனமோ அழுகையோ இராதா
       78. துன்பங்களுக்குக் காரணமான பந்தங்களெல்லாமுமே பொல்லாதனவல்லவா?
    79. அவ்வெல்லாவற்றையுமே நீக்கிக் கொள்ள மக்கள் விரும்பமாட்டாரா? விரும்பவேண்டாமா?
      80.  அவையெல்லாம் நீங்கப்பெறுவது தான் உண்மையான விடுதலையென்பது தெரிகிறதா?
      81.  முத்தியன்பத்தை நீர் கண்டீரா?
      82. உலக வின்பத்தைத்தானும் நீர் காண்பது சிறிதே யன்றா?
   83. முத்தியின்பத்தைக் கண்டவர் அதைக் காணுமுன் உலக வின்பத்தையும் நன்கு கண்டவரல்லரா?
     84.  ஆகலின் அவ்விரண்டின்பங்களையும் ஒப்பு நோக்கிக் காண்டற்கும், காட்டற்கும் முற்றிலுந் தகுதியுடையார் அவரன்றி வேறார்?
   85. அவற்றின் உண்மையின்மைகளையோ, உயர்விழிவுகளையோ அவர் தீர்ப்பைக் கொண்டுதான் புத்திசாலிகள் ஏற்பர்ரென்பது தெரிகிறதா?
      86. மக்கள் வாழவேண்டுமென்ற கருணை உமக்குமட்டிற்றான் உள்ளதா?
      87. அவருக்கில்லையா?
   88. முத்தியின்பத்தைக் காணாதவருள்ளேனும் எல்லாருமே உலகவின்பத்தை விரும்புகின்றனரா?
   89. கள், காமம், பணம், அதிகாரம் முதலியவற்றில் வெறி கொண்டவரே அதற் கலைகின்றனரென்பது உண்மையில்லையா?
    90. அறிவு, இரக்கம் முதலிய அருங்குணசீலர் பலர் அவ்வெறிகளை அறவே துறந்து தொண்டு செய்யுமுகத்தால் உலக வளத்தைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டு எளிய வாழ்க்கை நடத்தி வருவதை யின்றும் பார்த்திலீரா?
     91.  உம் ஈ.வே.ரா.  உலகவின்பத்துக் காசைப்பட்டவரா? அதனை வெறுத்துப் பல துன்பங்களைச் சகித்துக்கொண்டு எளிமையில் வாழ்பவரா?
      92.  உலகவின்பத்தைத் துறந்தவர் அதனை நுகர்கிறாரென்று எப்படிச் சொல்லமுடியும்?
      93. உலகவளத்தை அவசியத்தளவில் நுகர்வது உலகவின்பத்தை நுகர்வதாமா?
IX.
      94. இவ்வுலக மொன்றுதா னிருக்கவேண்டுமென்ற வரையறை யுண்டா?
      95. வேறும் பல வுலகங்க ளிருப்பதால் யாருக்கென்ன நஷ்டம் வந்துவிடும்?
   96. அரசாற் கண்டுபிடிக்கப்படுங் குற்றங்களைப் போன்று கண்டுபிடிக்கப்படாத குற்றங்களையும் மக்கள் செய்யாரா?
    97. அரசநீதியிற் கண்டுள்ள இறுதித் தண்டனையாலுந் தீர்தலாகாப் பெருங்கொடுங் குற்றங்களையும் அவர் செய்வ தில்லையா?
      98.  அக் கண்டு பிடிக்கப்படாத குற்றங்களுக்கும் அரச தண்டனையால் தீர்தலாகாப் பெருங்குற்றங்களுக்கும் அவர் தண்டிக்கப்பட வேண்டாமா?
       99.தண்டிக்கப்படுவதெங்ஙனம்?
    100. அக்குற்றங்களை வைத்து இங்குள்ள தண்டசாலைகள் போன்று வேறும் நரகங்களெனப் பல வுலகங்க ளிருக்கலாமென ஊகித்துக் கொள்வதாற் கேடென்னை?
     101.  அவற்றை யில்லையெனப் பிரசங்கித்து மக்களைப் பெருங் கொடுமைகளில் தூண்டுதல் அவர்களை வாழவிடுவதாமா?
    102. அப் பிரசங்கத்தாலேயே மக்களை அக்கொடுமைகளுக்குரிய தண்டனைகளிலிருந்து தப்புவிக்க முடியுமா?
X.
     103.  பொறிகளுக் கெட்டாத பொருள்களை வேறோ ராற்றாத் சிந்தித்து அவற்றின் உண்மைகளை வெளியிட்டால் அவை மக்களின் உலகவின்ப நுகர்ச்சிக்கு இடையூறாய் முடியுமென நடுங்கி அச்சிந்தனையை அப்பொருள்களின் ஆராய்ச்சியிற் செல்ல விடாமல் தடுக்கமுயல்வது தகுமா?
 
ஆக அநுவாதம் 1 க்கு ஆசங்கை 103

--------------------------------------------------------------------------------