Home            On DK Movement, Atheism        Meaning of Viboothi or Thiruneeru
 

Vallalar Ramalinga Swamy - Aarutpaa? - it has Sexual overtones

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
மனமே! சிந்தனை செய்

நெல்லைச் சித்தாந்த சைவச் செந்நெறிக் கழக வெளியீடு நிர் -18

Quick Navigation to more Saivism Links :
------------------------------------------------------------------------------
 1. திருவருட்பா பாடிய இராமலிங்கர் அருளாளரா?
2. அப்பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா?
3. சொன்னால் பாபமில்லையா?
4. படித்தால், பாடினால் ஆன்மலாபம் கிட்டுமா?

------------------------------------------------------------------------------
தெளிந்து செயலாற்று
சார்வரி சித்திரை விஷ வெளியீடு
13-4-1960
சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகம்,
73, கீழ்ப்புதுத் தெரு,
திருநெல்வேலி - 6

------------------------------------------------------------------------------
 
    1. பிள்ளை பெண்ணோயாற் பீடிக்கப்பட்டார்.
        அதற்காகவே இரசஞ் சேர்ந்த மருந்தினைப் பரிகாரி கந்தப்பிள்ளையிடம் வாங்கி யுண்டு அதனாலே இராமலிங்க பிள்ளைக்குப் பற்களும் விழுந்தமை யார்க்குந் தெரிந்ததொன்றே.
    'என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட்
        கின்ப மென்வே யெனக்கவர் நோய்
    தன்னைக் கொடுத்தார் நானந்தோ
        தளர்ந்து நின்றேன்"
                        [2-ம் திருமுறை அவலமதிக்கலைசல்]
    2. பூப்புப் பெண்களைப் புணர்ந்தார்.
     "போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன்
        பூப்பினும் புணர்ந்த வெம்பொறியேன்
      மோகமே யுடையேனென்னினு மெந்தாய்
        முனிந்திடல் காத்தருளெனையே"
     "பூப்பினும் பலகான் மடந்தையர் தமைப்போய்
        புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
      பாப்பினுங் கொடியருறவையே விழைந்த
        பள்ளனேன் கள்ளனேன்"
                        [6-ம் திருமுறை - ஆத்தும விசாரத்தழுங்கல் 1]
    3. பகலிலே துறவி, இரவிலே காமுகர்.
     (அ) "துனித்த வெம்மடவார் பகல் வந்த போது
            துறவியிற் கடுகடுத் திருந்தேன்
         தனித்திரவதிலே வந்தபோது ஓடித்தழுவினேன்
            தடமுலை விழைந்தே"
     (ஆ) தார்த்தட முலையார் பலரொடு நான்சார்
            தளத்திலே வந்தபோதவரைப்
         பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன்
            தவசுப் பாதகப் பூனைபோ லிருந்தேன்
         பேர்த்து நான் றனித்தபோது போய் வலிந்து
            பேசினேன் வஞ்சரிற் பெரியேன்.
                        [6-ம் திருமுறை - அபயத்திறள் 17]
     (இ) மின்னைப் போலிடை மெல்லிய லாரென்றே
            விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
        பொன்னைப் போல் மிகப்போற்றி யிடை
            நடுப்புழையிலே விரல் போதப் புகுத்தி யீத்
        தன்னைப் போன் முடை நாற்றச் சலத்தையே
            சந்தனச் சலந்தா னெனக் கொள்கின்றே,
        னென்னைப் போல்வது நாய்க்குலந்
            தன்னிலுமில்லை யல்ல தெவற்றினு மில்லையே.
                       [2-ம் திருமுறை - தனித்திரு விருத்தம் - 11]
4. பாதார கமனம்
    ஒருபெண் பலாற்காரமாக வந்து பற்றியிணைத்துப் புணர்ந்து சென்றாளாம்.  அப்போது தம் மனம் வருத்தமுற்று என் செய்தோ மென்று இறங்கினாராம்.  அப்போது சிவபிரான் தோன்றி, பெருமடமுடைப் பிள்ளாய்! என்ன கெட்டுப் போயிற்று; ஒன்றுமில்லை என்று தேற்றினாராம்.
    ஒரு மடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னருளம்
        வருந்தியென் செய்தோ மென்றயர்ந்த போது,
    பெரும்டஞ்சேர் பிள்ளாயென் கெட்ட தொன்றுமிலை நம்
        பெருஞ் செயலென்றெனைத் தேற்றிப் பிடித்த பெருந்தகையே
    திருமடந்தை மாரிருவரென்னெதிரே நடிக்கச்
        செய்தருளிச் சிறுமையெலாந் தீர்த்த சிவமே.
                        [6-ம் திருமுறை அருள்விளக்கமாலை 47]
5. அடியாரைக் கூடும் அதனை புணர்ச்சியெனக் கொளினும் இராமலிங்கர் கடவுளை அகப்புணர்ச்சி செய்ததன்றிப் புறப்புணர்ச்சியும் செய்தாராம்.
    (அ) "வான்பதிக்குங் கிடைப்பரியார் சிற்சபையினடிக்கும்
            மணவாள ரெனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்"
    (ஆ) "புறப்புணர்ச்சி யென்கணவர் புரிந்த தருணந்தான்
            புத்தமுத நானுண்டு பூரித்த தருணம்"
    (இ) என்னையகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார்
            புறப்புணர்ச்சித் தருணம்.
                      [6-வது திருமுறை அனுபவமாலை - 94-98]
6. வேதங்களையும் சிவாகமங்களையும் நிந்தனை செய்தார்.
    (அ) சதுமறை யாகம சாத்திர மெல்லாஞ்
          சந்தைப் படிப்பு நஞ் சொந்தப் படிப்போ
        விதுநெறி சுத்தசன்மார்க்கத்திற் சாகா
          வித்தையைக் கற்றனன்.
                     [6-வது திருமுறை ஆனந்த மேலீடு 4]
    (ஆ) வேதாக மங்க ளென்று வீண்வாத மாடுகின்றீர்
          வேதா கமத்தின் விளைவறீயீர்
        சூதாகச் சொன்னவலா லுண்மை வெளிதோன்ற
          வுரைத்த லிலை யென்னபயனோ விவை.
                    [6-ம் திருமுறை - சுத்த சிவ நிலை-30]
    (இ) "இவல் வேதாகமங்கள் புராணங்களிதிகாச
            முதலா விந்திர சாலங் கடையாவுரைப்பர்"
                    [6-வது திருமுறை அருள் விளக்கமாலை - 87]
7. பொய்ச் சத்தியம் செய்தார், வேளாளர்களைத் தூஷித்தார்
    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் கருங்குளியார்க்கும், அவரது பாடல்களுக்குத் திருவருட் பிரகாச வள்ளலார், திருவருட்பா வெனப் பெயர் வைத்தல் அனுவளவும் ஒவ்வாதெனப் பிரசங்கித்தகாலை அதற்குத்தக்கச் சமாதானஞ் சொல்லத் தெரியாது வயிறெரிந்து மனம் புகைந்து ஒரு பிராமணரையும் தம்முடன் சேர்த்துச் சிதம்பரத்தில் ஒரு பிரசங்கம் வைத்தார்.  அதில் "நாவலர்" என்ற சொல்லை எடுத்துக் கொண்டு, நா-அல்லாதவர்; நாவினாலே துன்பப் படுபவர் எனப் பலவாறு தூஷித்தார்.  அது கேட்ட ஒருவர் சபையிலெழுந்து, குழியாரே! நுமக்கும் அப்பட்டத்திற்கும் வெகு தூரமே திருவாவடுதுறை யாதீன மகாசந்நிதானம் வேறு யாருக்காவது அந்தப் பட்டத்தைக் கொடுத்ததுண்டா? நீவிர் பொறாமைப்பட்டு அநர்த்தங் கொள்ளல் நன்றன்று.  உம்மைத்தானா சிவனார் வந்து மாலை யிட்டார்.  சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் நாவலர் என்னும் பெயரிருத்தலால் அதற்கும் இப்படித்தான் அர்த்தம் பண்ணுவீரா? கணக்கராய உமக்கு நல் வேளாள குலத்தார்க்குரிய பிள்ளைப் பட்டத்தை யாவர் கொடுத்தார்.  அதற்கு மேல், சுவாமிகள் என்ற பட்டத்தைப் பொள்ளாங்குடக்கு வள்ளலார் பட்டங்க் கட்டினாற் போல வைத்துக் கொண்டீரே" எனப் பலவாறு கண்டிக்க இராமலிங்கம் பிள்ளை யெழுந்து போய் விட்டார்.  மற்றை நாள் இராமலிங்கம் பிள்ளை நாவலர் என்ற சொல்லை எடுத்து இன்ன இன்ன வாறு தூஷித்தார் என்று பத்திரிகை வெளிப்படுத்தப்பட்டது.  அப் பத்திரிகையைக் கொண்டு நீதித்தலத்தில் நாவலர் அவர்கள் இராமலிங்கம் பிள்ளை மீதும், பிராமணர் மீதும் வழக்குத் தொடுத்தனர்.
    மஞ்சக் குப்பம் கோட்டில் இராமலிங்க பிள்ளை வந்து "நான் நாவலரை நிந்திக்கவில்லை, நாவலர் என்ற சொல்லுக்கும் அப்படி யர்த்தம் விரித்தது கிடையாது" என்று பொய்ச் சத்தியஞ் செய்தனர்.  இவ்வளவு சொன்னதே போதும் என்று நாவலர் அவர்கள் பிள்ளையை நீக்கிவிட்டார்.  இராமலிங்க பிள்ளைக்குத் துணையாக நின்று தூஷித்த பிராமணர்க்கு 50 ரூ.  அபராதம் விதிக்கப்பட்டது யாவரே அறியாதார்.  அதனைச் சுக்கில வருஷம் அதாவது கி.பி.1871 வருஷத்துக் குறிப்பைப் பார்த்துணர்க.
    அப்போது பிள்ளை தம் வழக்குச் செலவிற்காகவும் பிராமணர்க்கு விதித்த அபராதத்திற்காகவும் பணம் வேண்டிச் சில சைவவேளாளர்களிடம் போய்க்கேட்டார்.  அதற்குமுன் இவரிடத்தில் அன்புடைய அவர்கள் இவர் கள்ளச்சத்தியம் நீதித்தலத்திற் செய்தாரென்று கண்டது தொடங்கி, ஐயா கணக்கரே உம்முடைய தயவு எங்கட்கு அவசியமில்லை என்று கூறவே பிள்ளை கோபித்து உங்கள் வேளாள குலமிப்படித்தான் அநியாயஞ் சொல்வோர் என்று, கையறம் பாடுகின்றேனென வேளாரைத் தூஷித்துப் பாட்டுப் பாடினார்.  அத்தூஷணைப் பாட்டுக்களையுந் திருவருட்பா என்று சேர்த்திருக்கின்றார்.  அவை வருமாறு:-
    "குண்டு நீர்க்கடல்சூ ழுலகத்துளோர்
        குற்றமாயிரங் கோடி செய்தாலு முன்
    கொண்டு பின் குலம் பேசுவரோ வெனைக்குறிக்
        கொள்வா யெண் குணந்திகழ் வள்ளலே"
                        [6-வது திருமுறை அபயங் கூறல்]
    "மழவுக்கு மொருபிடி சோறளிப்பதன்றி
        யிருபிடி யூண் வழங்கி லிங்கே
    யுழவுக்கு முதல் குறையுமென வளர்த்
        தங்கவற்றை யெலா மோகோ பேயின்
    விழவுக்கும் புலாலுண்ணும் விருந்துக்கு
        மருந்துக்கு மெலிந்து மாண்டா
    ரிழவுக்கு மிடர்க் கொடுங்கோ லிறைவருக்குங்
        கொடுத் திழப்ப ரென்னே யென்னே"
                       [6-ம் திருமுறை அபயங் கூறல்]
 
8.  வியாகரணம் - தொல்காப்பியம் - பாணினீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கிற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே -
                    (திருவருட்பா - சமரச சன்மார்க்க சங்க வெளியீடு)
                    [6-ம் திருமுறை வசனபாகம் பக்கம் 573.]
9. சிவமாந்தன்மைப் பெருவாழ்வு பெற்ற 63 நாயன் மார்களும் கணபதி சுப்பிரமணிய சுவாமிகளும், உயிரற்ற பொருள்களாகிய தத்துவக்கூட்டங்கள் என்று நிந்தித்தார் - இதன் விபரம் அவர் ஸ்தாபித்த சுத்தசன்மார்க்கத்டில் விளங்கும் என்றார் -
                    (திருவருட்பா, சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு)
                    [6-ம் திருமுறை திருநெறிக்குறிப்புகள் பக்கம் - 65]
10.  சாத்திரம் குப்பை என்றார்
    சாதி சமயங்களிலே வீதி பலவகுத்த
        சாத்திரக் குப்பைகளெல்லாம் பாத்திரமன்று.
                    [6-ம் திருமுறை அனுபவ மாலை 9]
    (a) திருமூலர் திருமந்திரம் சாத்திரங்களிற் சிறந்தது.
                    (சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு)
                    [6-ம் திருமுறை - திருநெறிக் குறிப்புகள் பக்கம் - 6]
குறிப்பு:- அப்படியானால் குப்பைகளில் சிறந்தது திருமந்திரம் என்று தானே அர்த்தம்!
11. சமயங்கள் பொய் என்றார்.
    (a) எச்சமயங்களும் பொய்ச் சமயம்.
                    [6-ம் திருமுறை - வர்க்கமாலை என்னும் காலைப்பாட்டு]
    குறிப்பு:- ஆரியசமாசம், பிரம்மசமாசம், அருள்நெறித் திருக்கூட்டம் சுத்த சன்மார்க்க சங்கம், தெய்வ நெறிக்கூட்டம் எல்லாம் பொய் என்று தானே பொருள்!
    (b) வேதாந்த சித்தாந்தப் பெரியவர்கள் உளர்கிறார்களாம்.
    சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்த சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லக்ஷயம் வைக்க வேண்டாம் அவற்றில் தெய்வத்தைப் பற்றி, குழுஉக் குறியாகக் குறித்திருகிறதே யன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.  அவ்வாறு பயிலுவோமே யானால் நமக்குக் காலமில்லை.  ஆதலால் அவற்றில் லக்ஷயம் வைக்க வேண்டாம்..........சமயந் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மையறியாத சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள் அதனால் நீங்கள் அது ஒன்றையும் நம்ப வேண்டாம்.
                    (6-ம் திருமுறை வசன பாகம் 13 உபதேசம்)
                    [பக்கம் 573, 575 ச.சு, ச.ச. வெளியீடு]
12. அவருடைய சீடர்கள் தீயர் என்று அவரே சொன்னார்.
    தீக்குணத்தார் யாவருமென் சீடரெனி லென்னுடைய
    தீக்குணத்தினெல்லை யெவர் தேர்கிற்பார்.
                    (சிவநேச வெண்பா - 73)
13.  நான்முகன், நாரணர், புத்தர் முதலியோரை சிறுபிள்ளைக் கூட்டம் என்றார்.
    நான்முகர் நல்லுருத்திரர் நள் நாரணரிந்திரர்க
        நவிலருகர் புத்தர் முதன்மதத் தலைவரெல்லாம்
    வான்முகத்திற்றோன்றி யருளொளி சிறிதே யடைந்து
        வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே
    தேன்முகந்துண்ட வரெனவே விளையாடா நின்ற
        சிறுபிள்ளைக் கூட்டம்
                   [6-ம் திருமுறை அருள் விளக்க மாலை 89]
14. சிதம்பர தூஷணமுஞ் செய்தனர்.
    தில்லைத் தலத்தினும் பார்க்க உயர்ந்த தலங்கள் வேறின்மையால் கோயில் என்ப.  அங்கே பிள்ளை தரிசிக்கப் போயகாலை இரகசியலிங்கத்தைக் காட்டுமாறு தீக்ஷதர்களைக் கேட்க, அவர் உட்பிரவேசித்தல் கூடாது, இங்கு நின்று தரிசிக்க என்றனர்.  பிள்ளை பெருஞ்சினங் கொண்டு இதற்கு எதிராக ஒரு சிதம்பர தலமுண்டாக்கி, நடராசரையும் அங்கே வரவழைத்து நடனஞ் செய்விக்கின்றோம்.  சிற்றம் பலமுஞ் செய்கின்றாமென்று வடலூரில் உத்தரஞான சிதம்பரமென்று ஒரு கட்டிடங்கட்டி, நடராசர் எல்லாருங்காண இங்கே வந்து நடம் புரிவார் என்று கதையும் கட்டி யிறந்தார்.  அந்தக் கட்டிடத்தில் இடிவிழுந்து தகர்ந்தது யாவருமறிவர்.  சிதம்பர வெளியைப் பார்க்கினும் வடலூர் வெளி பெரிதென்றும், சிதம்பர சபை இடுக்கென்றும், நடஞ் செய்தற்கு ஒடுக்க மானதென்றும், தில்லையிலொரு அம்பலம் இருக்கிறதென்றும், வடலூராகிய பார்வதிபுரத்திலே சிற்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பல முதலிய எட்டு அம்பலங்களிருக்கின்றன வென்றும் சொல்லியழைத்து வாடியென்று அடிதாளத்திற் பாடியுள்ளார்.
    வருவாரழைத்து வாடி-வடலூர் வடதிசைக்கே
        வந்தாற் பெறலாம் நல்வரமே
    இந்த வெளியில் நடமிடத்துணிந்தீரே- யங்கே
        யிதைவிடப் பெருவெளி யிருக்கு தென்றாலிங்கே - வரு
    இடுக்கிலாமலிருக்க விடமுண்டு நடஞ் செய்ய
        விங்கம்பல மென்றங்கே யெட்டம் பல முண்டைய
    ஒடுக்கிலிறுப்ப தென்னவள்வு கண்டு கொள்வீரென்னா
        லுண்மையிது வஞ்சமல்ல வுன்மேலாணை யென்று சொன்னால் - வரு
                            [6-ம் திருமுறை - கீர்த்தனைகள்]
    (b) வடலூரே 'சிற்சபை' என்று பாடினார்.
                           [6-ம் திருமுறை சிற்சபை விளக்கம் பத்துப் பாடல்கள்]
    (c) அவ்வடலூர் அம்பலப்பாட்டே அருட்பாட்டு
        அல்லாத பாட்டெல்லாம் மருட் பாட்டென்றார்
                          [6-ம் திருமுறை நாமாவளி]
    (d) வடலூர் உத்தரஞான சிதம்பரம் எனவே, தில்லைத்தலமாய் விளங்கும் சிதம்பரம் விசேட மில்லாத பூர்வசிதம்பரம் என்றும் அதனாற் பயனில்லை யென்றும் நிந்தித்தார்.
                          [6-ம் திருமுறை உத்தரஞான சிதம்பர மான்மியம்]
15. ஜீரணமான ஆகாரம் மகாவிஷ்ணு என்றார்.
    ஆகாரம் உண்டவுடனே ஜீரணமாய்ப் பால்வண்ணமாக ஆகப்பையில் வெண்மை நிறமாக இருப்பது திருப்பாற்கடல் என்றும், அதனடி உண்டாம்பசி - தீவிர சக்தியாகிய உஷ்ணம் - வடவாமுகாக்கினி என்றும் இரண்டிற்கும் மத்தியில் உண்டாகிய சீதளம் - விஷ்ணு பள்ளி கொண்டார் என்று சொல்வது.  திருப்பாற்கடலில் விஷ்ணு பள்ளி கொண்டது இது தான்.
                        (மதறாஸ் ச.சு.ச.ச. வெளியீடு 6-ம் திருமுறை)
                        [திருநெறிக் குறிப்புக்கள். 87]
16. தாயுமானவர் முதலானவர்களை இகழ்ந்தார்.
    சமயமத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அநேக பெரியோர்களும் சுத்தப்பரப் பிரமத்தினிடத்தில் இரண்டர கலந்து விட்டதாக முறையிடுவது வாஸ்தவமா? அவாஸ்தவமா? என்றால் அவாஸ்தவம்.  சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும்.  என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வசித்தி வல்லபமும் பெறக்கூடும்.  மற்ற சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கூடிய படிகளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை.  தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர்; மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம்.  இதில் நித்தியதேகம் கிடையாது.  இது சன்மாக்கமே அன்றிச் சாத்தியமல்ல.  நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கு போது, இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீளவருவார்கள், முன்னில் அளவைக்காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்க குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.
                      [6-ம் திருமுறை திருநெறிக் குறிப்புக்கள்]
17. இராமலிங்கர் பாடல் அருட்பா அல்ல - கோர்ட்டு தீர்ப்பு
    இராமலிங்கர் பாடல்கள் திருவருட்பா ஆகாது என்று  அப்பாடல்கள் லிருந்தே தக்க சான்றுகள் எடுத்துக்காட்டி "மருட்பா மறுப்பு" என்ற பெயரால் பூ.பாலசுந்தர நாயக்கர் எழுதிய புத்தகத்தின் பேரில் இராமலிங்கம் பிள்ளையின் தமையன் மகனாகிய வடிலேலுப் பிள்ளை என்பவர் 1904-ம் வருஷத்திய 24533 வது காலண்டர் நம்பரில் சென்னை பிரசிடென்சி மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நா. கதிரைவேற் பிள்ளை சு.பாலசுந்தர நாயக்கர் இருவர் பேரில் வழக்குத் தொடுத்தார்.  மாஜிஸ்ட்ரேட் இராமலிங்கம் பிள்ளை பாடல்களை அருட்பா என்று ஒப்புக் கொள்ள முடியாது என்று கூறி கதிரைவேற் பிள்ளை, பாலசுந்தர நாயக்கர் இருவரையும் விடுதலை செய்தார்.   இதன் பேரில் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
அதாவது -
    High Court Calender 1905  வருஷத்திய No.143.
    சென்னை பிளாக்டவுண் பிரசிடென்ஸி மாஜிஸ்ட்ரேட்டாருடைய 1904-ம் வருஷம் நவம்பர் மாதம் 21உ உத்தரவை கனம் பொருந்திய கோட்டார்கள், அடியிற் கண்ட காரணங்களால் மேல் விசாரணை செய்து ரத்துச் செய்யும் படி மனுதாரர் கேட்டுக்கொள்கின்றனர்.
    பிரதிவாதிகள் தாக்கல் செய்த ரிக்கார்டுகளை மாஜிஸ்ட்ரேட்டார் க்ஷயத்துக்கு ஆதரவாகக் கொண்டது பிசகு;
    இராமலிங்க சுவாமிகள் பாடல்களுக்கு முழுவதும் தவறான பொருள் கொண்டது பிசகு.
    1905 நவம்பர் 21 உ ஹைகோர்ட்டு ஜஸ்டிஸ் மூர்துரை, ஜஸ்டிஸ் பென்ஷன்துரை அவர்களின் தீர்ப்பு
    இந்தக் கேசை விசாரிக்கும்படி உத்தரவு செய்வதனால் யேதேனும் பொது நன்மை யுண்டாமென நாங்கள் நினைக்க வில்லை - அதனால் நாங்கள் இதில் பிரவேசிக்க மாட்டோம்.
    குறிப்பு:- இந்த வழக்கு விபரங்கள் இராமலிங்கம் பிள்ளையின் பக்தர் டாக்டர் தஞ்சை சண்முகம் பிள்ளை அவர்கள் மாணவகர் தங்கவேலுப் பிள்ளை 20-9-1906ல் வெளியிட்ட "ஈழநாட்டு கதிரைவேற் பிள்ளையைப் பற்றி நடந்த விவகாரம்" என்ற புத்தகத்தின் சாரம்.
(a) அருட்பா ஆகாது என்பதற்கு வழக்கில் தாக்கல் செய்த ரிக்கார்டுகள்.
    1.  "இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாசதர்ப்பணம்" அல்லது "மருட்பா மறுப்பு" பாலசுந்தர நாயக்கர் எழுதி வெளியிட்டது.
    2. 1872 பிரசோற்பத்தி வருஷம் தை மாதத்தில் வேதாரண்யம் உதய மூர்த்தி தேசிக சுவாமிகளால் வெளியிடப்பட்ட "முக்குணவயத்தின் முறை மறைந்தறைதல்" என்னும் பத்திரிகை-
    3. இராமலிங்கம் பிள்ளை தமையன் சபாபதிப் பிள்ளையவர்களால் எழுதி வெளியிடப்பட்ட "இராமலிங்கம்பிள்ளை படிற்றொழுக்கம்"
        "இராமலிங்கம் பிள்ளை அங்கதப்பாட்டு" என்ற நூல்கள்.
    4. தேவாரம் முத்துசாமி முதலியார் வெளியிட்ட "சாதிப் புரட்சியாவர்" என்ற பத்திரிகை -
    5. தத்துவபோதினி - தினவர்த்தமானி - முதலிய பத்திரிகை - பேரம்பலப் பிரசங்கப் பத்திரிகை - அற்புதப்பத்திரிகை முதலாயின.
    (b)  "மருட்பா மறுப்பு" என்ற புத்தகத்தை நீதிமன்றத்தில் காண்பித்து "இராமலிங்கர் பாடல் அருட்பா ஆகாது" என்று தீர்ப்பு பெற்று நா.கதிரைவேற் பிள்ளை வெற்றி பெற்றதற்கு அவர் மாணாக்கர் திரு வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களே சாட்சி.
    'அருட்பா வென்பது ஆறிரு முறையே என்று
    அரச மன்ற மேறிப் பசுமரத்தாணிபோல நாட்டி'
    'மன்னவர் நீதி மன்றினி லேறிப்
    பன்னிரு முறையே உன்னருட் பாவென்
    றாணி பசுமரத் தரைந்தா லென்னக்
    காட்டிச் சாத்திரம் நாட்டினனெவனோ'
    [பெரிய புராணம் - குறிப்புரை. by திரு.வி.க.1910 வருடப் பதிப்பு]
குறிப்பு:- இப்புத்தகத்திலுள்ள விஷயங்கள் நீதிமன்றம் செல்ல இராமலிங்கர் பாடல்கள் அருட்பா அல்ல என்று நிலைநாட்டி "இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்னும் புத்தகத்திலிருந்தும் சங்கரன்கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளை அவர்கள் எழுதிய "நாடும் நவினரும்" புத்தகத்திலிருந்தும் தொகுக்கப்பட்டன.
18. தற்கொலை செய்து மாண்டார்.
    செத்தாரை யெழுப்புவே மென்று கதை கட்டி நாளைக் கழித்துவர, ஆங்காங்குள்ளார் நித்தித்துப் பலவாறு கூறினார்.  அவ்வவமானம் பொறுக்க மாற்றாது தாமே தம்முயிரை மாய்க்கத் தொடங்கி சிவனை நோக்கி முறையிட்டார்.  அவை வருமாறு:-
    'இத்தருணந் தவறுமெனி லென்னுயிர்போய்
        விடுமிவ்வெளியேன் மேற் கருணை புரிந்
            தெழுந்தருளல் வேண்டும்'
                    [6-வது திருமுறை திருவருட்பேறு 7]
    'இப்பாரிலிது தருண மென்னை யடைந்தருளி
        யெண்ணமெலா முடித்தருளி யேன்று கொளா யெனிலே
            தப்பாமலுயிர் விடுவேன் சத்தியஞ் சத்தியம்.'
                    [6-வது திருமுறை பிரியேனென்று]
என்றிவ்வாறு கூறியுள்ளார்.  இறுதியில் இராமலிங்கம் பிள்ளை தம்முடைய புளுகுகளெல்லாம் நடக்காமையால் அநேகர் வைதனர்.  அவ்வவமானம் பொறுக்க முடியாமல் தாமே தம்முயிரை மாய்த்துக் கொண்டார்.
    குறிப்பு:- தம்மைச் சிவமென்றும், சிவனது பெரிய பிள்ளை என்றும் சாகாவரம் பெற்றேன் என்றும், செத்தவரை எழுப்புவேன் என்றும் பிரசங்கம் செய்துவந்த இராமலிங்கர் வேறு எப்படி மரண மடைந்திருக்க முடியும்?
    19.  இராமலிங்கம்பிள்ளை ஜோதியில் கலக்கவில்லை.
    இராமலிங்க வள்ளலார், மிக அண்மையில் மறைந்தவர்.  அவர் உடலைப் பஞ்சீகரணம் செய்து விட்டு ஜோதியில் கலந்து விட்டார் என்னும் நம்பிக்கை அவருடைய அடியார்களுள் ஒரு சிலர்க்கிடையில் இருக்கிறது.  மற்றொரு சிலர் அவர் பூதவுடலை ஜோதியில் கரைத்து விடவில்லை; மற்றவர்கள் போன்று உடலை உகுத்து விட்டுப் பரஞ்சோதியில் கலந்தார் என்று பகர்கின்றனர்.  இப்பொழுது வடலூரில் கட்டு விக்கப்பட்டிருக்கும் ஞான சபைக்கு அருகிலுள்ள மேடையினுள் அவர் உகுத்த பூதவுடலை இரகசியமாக அடக்கம் செய்து விட்டனர் என்று பலர் பகர்ந்து வருகின்றனர்.  இதன் மர்மம் எதுவாயினும் நமக்குக் கவலையில்லை.  இராமலிங்க வள்ளலார் உலகு அறிய வெளிப்படையாக ஜோதியில் கலக்க வில்லை என்பது உண்மை.
    (சுவாமி சித்பவானந்தா அவர்கள், தர்மசக்கரம், மாதசஞ்சிகை, சக்கரம் 8, ஆரம் 12 பக்கம் 465)
மனமே! சிந்தனை செய். தெளிந்து செயலாற்று.

------------------------------------------------------------------------------
வேண்டுகோள்.
   இதுகாறும் கூறியவாற்றால் இராமலிங்கம் பிள்ளை அருளாளர் அல்லர் என்றும் அவர் பாடிய பாட்டுகள் அருட்பாக்கள் ஆகா என்றும் ஆரம்ப முதலே மறுப்பு நூல்கள் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.
    தேவாரம் முதல் பெரிய புராணம் இறுதியாகவுள்ள பன்னிரு திருமுறைகளும் அருளாளர்களால் பாடப்பட்டவை என்றும், அவைகளே அருட்பாடல்கள் என்றும், அவைகளே திருமுறைகள் என்றும், இன்று வரை அறிவுடையவர்கள் போற்றி வருவன என்பதும் எல்லோரும் தெரிந்த விஷயம்.
    தேவார திருவாசகங்களை விட்டு இராமலிங்கர் பாடல்களைப் போற்றுவது கனியிருப்பக் காய்கவர்ந்தது போலல்லவா!
    சிந்தனை செய்து, தெளிந்து, நன்மையைக் கடைப்பிடித்து, ஆன்மலாபம் பெற வேண்டுகிறோம்.
    இப்புத்தகம் பெறுவோர்கள் தங்கள் கருத்தைக் கீழ்கண்ட விலாசத்திற்கு எழுதியனுப்பக் கேட்டுக் கொள்கிறோம்.
சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகம்
73, கீழப் புதுத் தெரு,
திருநெல்வேலி டவுண்-6
 

------------------------------------------------------------------------------