Home            On DK Movement, Atheism       Vallalar a SEX Maniac?
 

Vallalar Statue can not be placed inside Temples

திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சைவர்களே! உஷார்

நெல்லைச் சித்தாந்த சைவச் செந்நெறிக் கழக வெளியீடு நிர் -20

Quick Navigation to more Saivism Links :
------------------------------------------------------------------------------

    நமது நெல்லைமா நகரில் சமீபத்தில் நடந்த சன்மார்க்க சங்கத்தின் 15-வது ஆண்டு விழாவில் (14-4-1960ல்) நிறைவேற்றிய தீர்மானங்களைச் சைவப் பெருமக்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.  அந்தத் தீர்மானம் சன்மார்க்க சங்கப் பத்திரிகை 'அருள்ஒளி' ஒளி 5. கதிர் 8ல் (1-4-19600 பிரசுரமாயிருக்கிறது.

அவை வருமாறு:-

    1. இராமலிங்க அடிகளாரின் திருவுருவத்தை, அஞ்சல் வில்லையில் பொறித்துப் பெருமைப் படுத்துமாறு திருநெல்வேலிச் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இந்திய அரசினரையும், சென்னை மாகாண அரசினரையும் மிக்க பணிவோடு வேண்டிக் கொள்கிறது.

    2. (a) தமிழ் நாட்டுத் திருக்கோயில்களிலே(சைவ வைணவ இரு மதத்தினர் கோவில்களில் என்று கருதுகிறோம்) இறைவன் அடியார் திருவுருவங்களோடு, இராமலிங்க வள்ளலாரின் திருவுருவத்தை அமைக்குமாறும்,

    (b) அடிகளாரின் திருவருட்பாக்களைத் திருக்கோவில்களில் ஓதப்பெறும் வழிபாட்டுப் பாடல்களோடு சேர்த்துப் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும்,

    (c) மக்களை மனப் பண்பாடு அடையச் செய்யும் திருவருட்பாக்களைத் திருக்கோவில்களில் எல்லோரும் காணும் படியான இடங்களில் பொறிக்குமாறும் செய்ய, சென்னை அறநிலையப் பாதுகாப்புத்துரை அமைச்சர் அவர்களையும் ஆணையாளர் அவர்களையும் திருநெல்வேலிச் சமரச சன்மார்க்க சங்கம் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறது.

    இந்தத் தீர்மானங்கள் 28-4-1960 தினமணிப் பத்திரிகையிலும் 15-4-1960 மாலை முரசுப் பத்திரிகையிலும் வெளியாகி யிருக்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்களைச் சற்று ஆராய்வாம்.  முதற் பாகத்தில் கண்டபடி தபால் வில்லைகளில் இராமலிங்கர் உருவத்தைப் போடுவதில் நமக்கு அக்கறையில்லை.  பிற்பகுதியைப் பற்றித்தான் ஒவ்வொரு சைவரும் சிந்திக்க வேண்டுகிறோம்.

    இராமலிங்கர் இற்றைக்கு சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வாழ்ந்தவர்.  ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடினார்.  அவருடைய சீடர்களும் அபிமானிகளும் அவரைப் புகழ்ந்தனர்.  அதோடு நில்லாமல் அவர் பாடல்களை அருட்பா என்றும், தேவார திருவாசக முதலிய திருமுறைகளுக்குச் சமமானவை யென்றும், அவற்றைக் கோவில்களில் ஓதவேண்டும் என்றும் சொல்லத் தலைப்பட்டனர்.  உடனே சைவ உலகத்துக்கு வரும் கேட்டை உணர்ந்து அநேக சைவ நூல்களை வெளியிட்டும், சைவநூல்கள் எழுதியும், சைவப் பிரசங்கங்கள் செய்தும், பல நன்மாணாக்கர்களுக்கு உபதேசித்தும் சைவத்தை அரண் செய்தும் பணியாற்றிய சைவ சித்தாந்த சீலராகிய யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் இராமலிங்கர் பாடல்கள் அருட்பா ஆகா எனவும் அவைகளைக் கோவில்களில் ஓதுதல் சிவாபரா தமாகும் விளக்கினார்கள்.  அது சம்பந்தமான விவகாரங்கள் நியாயஸ்தலத்துக்கும் கொண்டு போகப் பட்டன.  இறுதியில் அவை அருட்பாவல்ல என்றும் கோவில்களில் ஓதத்தக்கவையல்லவென்றும், தீர்ப்பளிக்கப்பட்டது.

      அதற்குப் பின் சிலர் அவர் சைவ சித்தாந்தியல்ல வென்றும் எல்லாச் சமயங்களும் ஒன்று தான் என்ற கொள்கையை யுடையவரென்றும், அவர் பாடல்களில் பல ஆபாசக்கருத்துக்கள் அடங்கியுள்ளன வென்றும், அருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் அவருக்குப் பொருந்தாது என்றும், அவர் பாடல்களுக்கு அருட்பா என்ற பெயர் பொருந்தாதென்றும் சாங்கோபாங்கமாக எழுத 1, இராமலிங்கருடைய உறவினர் வழக்குத் தொடர, அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இவையாவும் பழங்கதை.  அதற்குப்பின் ஒருவரும் இராமலிங்கருடைய உருவத்தைக் கோவிலில் வைப்பதற்கோ, அவர் பாடல்களை ஓதுவார்களைக் கொண்டு ஓதுவிக்கவோ முயற்சிக்கவில்லை.  இப்போது நெல்லை சன் மார்க்க சங்கம் இத்திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறது.  இராமலிங்கருக்கு இல்லாத பெருமையை கோவில்களின் வைப்பது மூலம் இச்சங்கம் அவருக்கு தேடிக் கொடுக்க முயல்கின்றது போலும்.  இச்சங்கம் இதற்கு முன் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் சுவாமி நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் இராமலிங்கர் உருவத்தை வைக்க முயற்சி செய்து அப்போதுள்ள தர்மகர்த்தர்களின் பலத்த ஆக்ஷபனையினால் மேற்படி முயற்சி பலிக்காமற் போயிற்று.  இப்போது மறுபடியும் முயற்சிக்கிறது.

    இராமலிங்கர் சைவ சமயி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.

    "சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லக்ஷயம் வைக்க வேண்டாம். (அவற்றில் தெய்வத்தைப் பற்றி) குழு உக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.  அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை.  ஆதலால் அவற்றி லக்ஷயம் வைக்க வேண்டாம்.  ஏனெனில், அவைகளில் - அவ்வச்சமய மதங்களிலும் -அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்கொள்ளுகிறதற்கு முடியாது.  ஏனெனில் நமக்குக் காலமில்லை.  மேலும், இவைகளுக் கெல்லாம் சாக்ஷ, நானே யிருக்கின்றேன்.  நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷயம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வள வென்று அளவு சொல்ல முடியாது.  அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலர்க்கும் தெரியும்.  அந்த லக்ஷயம் இப்போது எப்படிப் போய்விட்டது? பார்த்தீர்களா! அப்படி லக்ஷயம் வைத்ததற்குச் சாக்ஷவேறே வேண்டியதில்லை.  நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும், மற்றவர்கள் பாடலையும், சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷ சொல்லிவிடும்.  ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

    இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார்.  இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது.  ஆதலால் நீங்களும் விட்டுவீட்டீர்களானால், என்னைப்போல பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.  இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை"

        - (திருவருட்பா 6-ம் திருமுறை - வசனபாகம் 13-வது அஅத்தியாயம்) மதறாஸ் சமரஸ சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு.

    மேற்படி இராமலிங்கருடைய வாக்கு மூலம் "உபதேசம்" என்னும் தலைப்பின் கீழ் பத்தாவது பாராவாகப் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.  இவ்வுபதேசப்பகுதி ஸ்ரீமுக வருஷம் ஐப்பசி மாதம் 7-ம் தேதி புதவாரம் பகல் 8 மணிக்கு மேட்டுக் குப்பம் என்னும் சித்திவிலாகத் திருமாளிகையில் முதன் முதல் கொடி கட்டினவுடன் நடந்த விவகாரத்தின் குறிப்பு" என்று பதிப்பாளர் குறிப்பொன்று அப்புத்தகம் 569-ஆம் பக்கத்தில் காணப்படுகிறது.  இராமலிங்கர் சரித்திரம் எழுதிய தொழுவூர் வேலாயுத முதலியார், இராமலிங்கர் அதே வருஷம் தை மாசம் 19-ம் தேதி மறைந்தார் என்று எழுதியிருக்கிறார்.  ஆகவே, தான் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் தனக்கு அறிவு வந்ததாகவும் அதற்கு முன்னெல்லாம் தனக்கிருந்த அறிவு அற்ப அறிவு என்றும் பாடியவரே சொல்லியிருக்க அவ்வற்ப அறிவுடன் பாடிய பாக்களை அருட்பாக்கள் என்று அவருடைய சிஷ்யர்கள் சொல்லுவது பொருத்தமற்றதல்லவா?

    இராமலிங்க பக்தர்கள் வடலூர் திருச்செந்தூர் இந்த இடங்களில் உள்ளபடி இராமலிங்கருக்குத் தனிக்கோவில் கட்டி வழிபாடு செய்வதே பொருத்தமாகும்.  அப்படியல்லாமல் சைவ வைணவக் கோவில்களில் அவர் உருவச்சிலை வைப்பதற்கும், அவர் பாடல்களை ஓதுவதற்கும் முயற்சி செய்வது மிகவும், பொருத்த மற்றதும் வருந்தத்தக்கதுமாகும்.

    குருலிங்க சங்கம பக்தி முதிர்ந்து சிவனடியார்களைச் சிவமெனவே வழிபட்டுச் செயற்கருஞ் செய்கை செய்த தீரர்களான அறுபத்துமூன்று நாயன்மார்கள், பல  அற்புதச் செயல்கள் புரிந்து சைவசமய ஸ்தாபனம் செய்த ஆசார்ய மூர்த்திகளாகிய எங்கள் ஸ்ரீ ஞான சம்பந்தமூர்த்தி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகள் இதுபோல் வைணவ மதத்தில் உள்ள ஆசாரியர்கள் முதலியவர்களின் நிலை எங்கே, இராமலிங்கரின் நிலை எங்கே? எலும்பைப் பெண்ணாக்கியும், கல்லைத் தோணியாக மிதக்கச் செய்தும், முதலைவாய்ப் பிள்ளையை வரவழைத்தும் ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தும் இன்னும் பல அற்புதங்கள் செய்த திருமுறைகள் எங்கே? இராமலிங்கர் வெள்ளைப் பாடல்கள் எங்கே? மலைக்கும், மடுவுக்கும், கடலுக்கும் குட்டத்துக்கும், சூரியனுக்கும் மின்மினிக்கும் உள்ள தாரதம்மியமாகும்.  இராமலிங்கரை மேற் கூறிய நாயன்மார்களுக்கும், ஆசாரிய மூர்த்திகளுக்கும் சமமாக எண்ணிக் கோவில்களில் நுழைக்கவும், அவர் பாடல்களை அருள்வாக்காகிய தெய்வத் திருமுறைகளுடன் சமமாக எண்ணி ஓதுவிக்கவும் முயல்வது சிவத்துரோகமும் சிவாபராதமும் ஆகுமென்பதில் சந்தேகமில்லை.  நிற்க.

    சிவாலயங்கள் யாவும் சிவாகம விதிப்படியும் வைணவ ஆலயங்கள் பாஞ்சாத்திர ஆகம விதிப்படியும் கட்டப்பட்டு அந்தந்த ஆகம முறைப்படி நடத்தப்பட்டு வருகின்றன.  அவ்வாகமங்களுக்கு முரணாக எந்தக் காரியங்களும் செய்தல் குற்றமாகும்.  அப்படிச் செய்தால் நாட்டின் நலனும் மக்கள் நலனும் அழியும்.

    "ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
    போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
    கூற்றுதைத் தாந்திருக் கோயில்க ளெல்லாஞ்
    சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே"

    என்பது திருமூலர் திருவாக்கு.  இங்கே சாற்றிய பூசைகள் என்பது சிவாகமங்களில் விதிக்கப்பட்ட முறைகள் என்று பொருள்.

    சிவாலயங்களில் சிவபெருமானையும் அவரின் வேறல்லாத உமாதேவி, விநாயகக்கடவுள், முருகக்கடவுள், வீரபத்திரக்கடவுள், பைரவக்கடவுள் இவர்களையும் சிவபெருமானின் மற்ற வடிவங்களான கலியாண சுந்தர வடிவம், நடராச வடிவம், தெக்ஷணாமூர்த்தி வடிவம், பிக்ஷடன வடிவம், நடராச வடிவம், தெக்ஷணாமூர்த்தி வடிவம், பிக்ஷடண வடிவம், திரிபுரசம்ஹார வடிவம், காலசம்ஹார வடிவம் முதலிய வடிவங்களையும் சிவபிரான் திருவடியிற் கலந்த சிவப்கதர்களையுமே  பிரதிட்டை செய்து வழிபடவேண்டியது சிவாகமவிதி.  சிவபக்தர்கள் யார் என்பதைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் கூறுகிறது.

    மேலும் ஒவ்வொரு கூட்டத்தாரும் தாம் பெரியவர் என்று கருதுகிறவர்களின் உருவச்சிலைகளை கோவில்களில் வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் கோவில் ஒரு பொருட்காட்சி சாலையாக மாறிவிடுமல்லவா?

இராமலிங்க பக்தர்கள் முயற்சிப்பது போல்,

ஸ்ரீ விவேகானந்தரின் சீடர்களும்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களும்

ஸ்ரீ ராதா சுவாமியின் சீடர்களும்

ஸ்ரீ ரமணரிஷியின் சீடர்களும்

ஸ்ரீ சாய்பாபாவின் சீடர்களும்

ஸ்ரீ சின்மயானந்தரின் சீடர்களும்

ஸ்ரீ ராஜாராம் மோகன் ராயின் (பிரம்மசமாஜம்) சீடர்களும்

ஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் (ஆரியசமாஜம்) சீடர்களும்

ஸ்ரீ அபேதானந்தரின் சீடர்களும்

ஸ்ரீ சிவானந்த சரஸ்வதியின் சீடர்களும்

ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகளின் சீடர்களும்

ஸ்ரீ அனிபெஸண்ட் அம்மையார் (Theosophical Society) சீடர்களும்.

    இன்னும் பல கூட்டத்தார்களும் தாங்கள் தெய்வமாக வழிபடுகிற மகா புருஷர்களின் உருவச்சிலைகளை கோவிலில், வைக்க வேண்டுமென்று கருதக்கூடுமல்லவா? சைவ வைணவக் கோவில்களில் அவ்வுருவங்களை வைக்கலாமா? அந்தக் கூட்டத்தார்கள் தங்கள் தலைவர்களுக்குத் தனிமடங்களோ, கோவில்களோ கட்டி வழிபடுவதுதானே நியாயம்.

    மேலும் சைவ சித்தாந்த சமயத்தின் நெறிநின்றும் பல சித்தாந்த நூல்களையும் அருள்மொழிகளையும் சைவ உலகத்துக்கு உபகரித்தும் சிவசாயுச்யத்தை யடைந்தவர்களுமாகிய பல சிவஞானிகள் சமயாசாரியர்கள் காலத்துக்கு முன்னும் பின்னும் தோன்றியிருக்கிறார்கள்.  உதாரணமாக,

ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியசுவாமிகள் - கந்தபுராணம் பாடியவர்

ஸ்ரீ பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம் பாடியவர்

ஸ்ரீ கச்சியப்ப முனிவர் - தணிகைப்புராணம் முதலிய புராணங்கள் பாடியவர்

ஸ்ரீ அரதத்த சிவாசாரியார் - இருப்பு முக்காலியிலிருந்து சிவபரத்துவம் நிருபணம் செய்தவர்

ஸ்ரீ திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ சேந்தனார் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ கருவூர்த் தேவர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ கண்டராதித்தர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ வேணாட்டடிகள் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ திருவாலியமுதனார் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ புருடோத்தம நம்பி - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ சேதி ராயர் - திருவிசைப்பா ஆசிரியர்

ஸ்ரீ பட்டினத்தடிகள் - அநேகபிரபந்தங்கள் செய்தவர்

ஸ்ரீ நக்கீர தேவர் - திருமுருகாற்றுப்படை அருளிசெய்தவர்

ஸ்ரீ கபிலதேவ நாயனார் - 11ம் திருமுறைப் பிரபந்தம்

ஸ்ரீ தாயுமான சுவாமிகள் - ஆயிரக்கணக்கான சித்தாந்த சைவ சமயப் பாடல்கள் பாடியவர்

ஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள்  - சிவஞான பாஷ்யம், காஞ்சிப் புராணம் முதலிய பல நூல்ல்கள் அருளிச் செய்தவர்.

ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் - சிதம்பர மும்மணிக்கோவை, திருவாரூர்நான் மணிமாலை முதலிய பல நூல்கள் செய்தவர்.

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற முருகதாஸ் சுவாமிகள் - சைவ சமய சரபம் முதலிய சைவ சமயச் சார்புடைய பல நூல்கள் செய்தவர்.

இன்னோரன்ன சைவ சமயப் பெரியார்களின் திருவுருவங்களையே கோவில்களில் மரபுக்கு மாறாக வைப்பதற்கு இன்னும் சைவ உலகம் முற்படவில்லை.

    இங்ஙனமிருக்க சைவ சமயத்தையே சாராத, வேதாகம நிந்தனை செய்த, உருவவழி பாட்டை நிந்தனை செய்து ஒளி வழிபாட்டைப் போதித்த இராமலிங்கருடைய உருவத்தை வேதாகம விதிப்படி கட்டப்பட்ட சைவக் கோவில்களில் வைப்பதும், சைவ சித்தாந்தக் கொள்கைக்கு மாறான அவர் பாடல்களை ஓதுவதும், அதுவும் ஓதுவார்களைக் கொண்டே ஓதுவதும் எப்படிப் பொருந்தும்?  அதிபாதகம்! அதிபாதகம்!!

    களைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதவசியம்.  அற்றேல் அவற்றை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலைமை ஏற்படும்.

    இதுகாறும் விளக்கிய வாற்றால் இராமலிங்கர் சித்தாந்த சைவரல்லர் என்பதும் அவர்பாடல்கள் அருட்பாடல்கள் அல்ல என்பதும், அவருடைய உருவச்சிலையைக் கோவில்களில் வைப்பதும், அவர் பாடல்களை ஓதுவிப்பதும், சாஸ்திர விரோதம் என்பதும், சைவமக்கள் அதற்கு இடங்கொடுத்தல் சைவ சமயத்துக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் என்பதையும் சாஸ்த்ரோக்தமாக கோவில்களில் வழிபாடு செய்து வரும் சைவ மக்களின் மனதையும் புண்படுத்தும் செயல் என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம்.  அவர் சித்தாந்த சைவரல்லர் என்பதையும் அவர்களின் நூல்களில் உள்ள பிற விஷயங்களையும் விளக்குவதற்கு இந்த பிரசுரத்தில் இடம் போதாததால் விடுத்தாம்.  சந்தர்ப்பமும் அவசியமும் ஏற்பட்டால் இராமலிங்கர் பாடல்களைப் பற்றித் தனியான ஆராய்ச்சி வெளியிடப்படும்.

    வேறு எந்த சமய ஆசாரியர்களுக்கும், சமய நூல் ஆசிரியர்களுக்கும் இல்லாத மறுப்பும் எதிர்ப்பும் இராமலிங்கர் விஷயத்தில் அவர் தோன்றிய நாள் முதல் இன்று வரை இருந்து வருவதே இராமலிங்கரும் அவர் பாடல்களும் சைவர்களுக்கு உடன் பாடல்ல என்பதற்கு சான்றாகுமல்லவா?

    எந்தத் தனி மனிதருக்கும் கூட்டத்தாருக்கும் தம்முடைய அறிவுக்கு உண்மையென்று தோன்றுகிறதைக் கடைப்பிடிக்கவும் தாம் நம்புகிற தெய்வத்தை வழிபடவும், தாங்கள் பெரியவர்கள், அல்லது மகான்கள் என்று கருதுகிறவர்களைப் போற்றவும், பாராட்டவும் உரிமையுண்டு.  ஆனால் பிற சமயங்களில் தலையிடுவதும், மற்றச் சமயக்கோவில்களிலும் வழிபாடுகளிலும்  கொள்கைகளிலும் தம்முடைய விபரீதக் கருத்துக்களை நுழைக்கவும் செயலாற்றவும் முயற்சிப்பதும் வரம்பு மீறிய செயலாகும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

சைவர்களே! உஷார்!!

ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.


------------------------------------------------------------------------------

இராமலிங்கம் பிள்ளையையும் அவர் பாட்டுக்களையும் கண்டித்து அவர் காலந்தொடங்கி இதுகாறும் வெளியிடப்பட்ட நூல்களும் பத்திரிகைகளும் வருமாறு.

போலி யருட்பா மறுப்பு

குதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம்

திராவிடப் பிரகாசிகை

முக்குணவயத்தின் முறை மறந்தறைதல்

போலி யருட்பா வழுத்திரட்டு

இராமலிங்க பிள்ளை அங்கதப் பாட்டு

திருவருணெறித் தமிழ்வேதப் பிரபாவம்

போலியருட்பாக் கண்டனப் பிரசங்கம்

பசுகரண விபரீதாத்த நிக்கரகமும் போலியருட்பாக் கண்டனப் பரிகார மறுப்பும்

இராமலிங்கர் படிற்றொழுக்கம்

போலிவாதிகளுக்குப் புத்தி புகட்டல்

போலி யருட்பாக் கண்டன மகாவித்வ ஜனசபை

மருட்பா விவாத மத்தியக்ஷப் பத்திரிகை

சிவநிந்தை, குருநிந்தை, திருவருட்பா நிந்தையினார்க்குச் செவியறிவுறுத்தல்

குதர்க்கிகளின் பொய்கோள் விலக்கு

இராமலிங்கர் பாடல் ஆபாசதர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு

தமிழ்ப் பேரகராதி

மருட்பா மறுப்பு அரங்கேற்றம்

மனமே சிந்தனை செய்; தெளிந்து செயலாற்று

கருங்குழிப் பிள்ளை பாடல் ஆராய்ச்சி


------------------------------------------------------------------------------

இராமலிங்கம் பிள்ளை அருளாளர் அல்ல என்றும் அவர் பாடல்கள் அருட்பாடல்கள் அல்ல என்றும் ஆரம்பத்திலிருந்தே எழுதியும் பேசியும் வந்த பெரியார்கள்.

ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள்

திருவாவடுதுறை மகாசந்நிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள்

வேதாரணிய ஆதீனம் சற்குருநாத சுவாமிகளான உதயமூர்த்தி தேசிக சுவாமிகள்

மகாவித்வான் மதுரை இராமசுவாமிப் பிள்ளை அவர்கள்

மகாவித்வான் கொ.  சாமிநாத தேசிகர் அவர்கள்

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்

திருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்

தருமபுர ஆதீனம் சண்முகத் தம்பிரான் சுவாமிகள்

திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் சபாபதி நாவலர் அவர்கள்

ஸ்ரீ நா. கதிரைவேலுப் பிள்ளை அவர்கள்

ஸ்ரீ பாலசுந்தர நாயக்கர்

ஸ்ரீ மாமண்டூர் தியாகேச முதலியார் அவர்கள்

தூத்துக்குடி சிவஞான பிரகாச சபையின் அங்கத்தினரும் சித்தாந்தப் பிரசாரணருமாகிய ஸ்ரீமந் இரா. ம நயினார் செட்டியார் அவர்கள்

இராமலிங்க பிள்ளை தமையன் சபாபதிப் பிள்ளை

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை

சித்தாந்த சைவ செந்நெறிக் கழகம், நெல்லை


------------------------------------------------------------------------------

மதறாஸ் அறநிலயப் பாதுகாப்பு கமிஷனர் அவர்களுக்கும், ஆலய நிர்வாக அதிகாரிகளுக்கும் தர்மகர்த்தர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

    எந்த ஆலயம் எந்த ஆகமரீதியாக எந்தச் சமயத்தார் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டிருக்கிறதோ அந்த ஆலயத்தில் அந்த ஆகம விதிகளுக்கும் அந்தச் சமயத்தார் கொள்கைகளுக்கும் விரோதமாக எந்தக் காரியமும் செய்வது பொருத்தமற்றது, நன்மையல்ல, சட்டத்துக்கும் விரோதமாகும் என்று எங்கள் 16-வது வெளியீடாகிய திருவெம்பாவை திருப்பாவை பற்றிய விளக்கம் என்னும் நூலில் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறோம்.  ஆகவே இப்பிரசுரத்தில் விளக்கிக் காட்டியபடி இராமலிங்கர் உருவத்தை ஆலயத்தில் வைக்கவோ, அவர் பாடல்களை ஓதுவார்களைக் கொண்டு பாடுவிக்கவோ, கோவில் சுவர்களில் எழுதுவதோ கோவில்களில் அவற்றைப்பிரசாரம் செய்வதோ ஆகம விதிக்கு விரோதமாகையால் அச்செயல்களுக்கு இடங்கொடுக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்

சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகம்
73, கீழப் புதுத் தெரு,
திருநெல்வேலி டவுண்,
21-5-1960
------------------------------------------------------------------------------