Home    Valavu system     Ceremonies    Saivaite Rules

 

 

 

உருத்திராக்கம்

 
    சிவமணி, அக்குமணிமாலை, கண்டிகை, தாழ்வடம் என்று உருத்திராக்கத்திற்கு பல பெயர்கள் உண்டு.  திருஅடையாள மாலை என்பதும் இதுவே.
 
    உருத்திராக்க மரம் கிழக்கு ஆசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவுகள் ஆகியவற்றில் நிறைய இருக்கிறது.  இந்தியாவை ஓட்டிய நேபாளத்திலும் இவை இருக்கின்றன.  இந்தியாவில் பீகார், வங்காளம், அஸ்ஸாம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றிலும் உருத்திராக்க மரம் இருக்கிறது.
 
    செந்நெறியின் உடல், உண்மை உணர்த்தலாகிய திருவெண்ணீற்றுப்பூச்சு, உள்ளம், அனைத்துயிர்கள் மாட்டும் வைக்கும் கண்ணோட்டத்தின் அடையாளமாகிய சிவமணி. மணி என்பது கடவுள் மணி இதனையே கடவுள் கண்மணி என்பர்.  உயிர், மெய்யுணர்வு கைவரச் செய்துய்ய சிவனடியார்க்குச் சேர்ப்பிக்கும் 'சிவாய நம' என்னும் ஐந்தெழுத்து.
    நீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்னும் மூன்றனுள் நடுவாகக் காணப்படும் சிவமணி காந்த ஆற்றலையும், மின் ஆற்றலையும் ஒருங்குடையது.  அம்மணியினை அணிபவர்க்கு அவ்விருவகையாலும்
 
    உயிர் ஆற்றல் பெருகும்
    நோய் அணுகாது
    உடற்பொலிவும் வளரும் பெருகும்
    உடல் வலுவுண்டாகும்
    உடல் வலுவுண்டாகவே உள்ளத்துரன் உண்டாம்
    உள்ளத்துரன் உண்டாக நல்லொழுக்கம் பெருகும்
    நல்லொழுக்கம் பெருகுதலால் நன்மையே புரிவர்.
 
அக்குறிப்புத் தோன்றும் உருவகமாகக் கடவுள் கண்மணி என்றனர்.
 
    உருத்திராக்கம் செந்நீரைத் தூய்மை செய்யும், மூளை, மூச்சுப்பை, குருதிப்பை, குண்டிக்காய்ம் நரம்பு, நாடி முதலிய உள்ளுறுப்புக்கள் செவ்வையாக வேலை செய்யத்தக்க ஆற்றலைத் தந்து துணை புரியும். அங்ஙனம் செய்வதற்கு ஏற்றவாறு உடம்பில் பல்வேறு இடங்களில் அம்மணிகளை இடையறாது அணியப்படுதல் வேண்டும்.
 
    "பரமசிவன் மலன் பக்தர்க்குச் சின்ன
    முருவுடலிற் கண்டியு நீறும்"
         -சைவ சமய நெறி 192
 
    சைவ சமயிகளுடைய சிவசின்னங்கள் விபூதி, உருத்திராக்கம் என்னும் இரண்டுமாம்.  இன்றைக்கு சைவ சமயிகள் முறையோடு பொருந்தாது பெயரளவிலாது விபூதி தரிக்கின்றனர்.  ஆனால் உருத்திராக்கம் தரிக்கும் சைவர்கள் நம் மத்தியில் குறைந்து கொண்டே வருகின்றனர்.  காரணம் அதன் மகிமையை அறியாது தரிக்க கூசியதே ஆகும்.  அப்படி கூச்சம் கொண்டோரை கூத்தபிரான் காண கூசுவார்.
 
    "பூண்பதற்கு கண்டியினைக் கூசியிடும் புல்லியரைக்
    காண்தற்குக் கூசுமரன் கைத்து"
      -சைவ சமய நெறி 138
 
    மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரமுடையவராய் உள்ளவர் உருத்திராக்கம் தரித்தற்கு யோக்கியர் ஆவர்.  உருத்திராக்கம் தரித்துக் கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.
 
    ஆறுமுக சிவனாராகிய முருகவேளின் மறக்கருணைக் குட்பட்ட தாராகாசுரன் புத்திரர்களாகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி என்னும் திரிபுராதியர்களாலே தேவர்கள் அடைந்த துன்பத்தை ஸ்ரீகைலாபதியிடம் முறையிட்ட போது பரமேஸ்வரர் ஆயிரம் தேவ வருஷம் தம்முடைய மூன்று திருக்கண்களை மலர்த்திக் கொண்டிருப்ப அவைகளிலிருந்து நீர் பொழிந்தது.  சூரிய ருபமாகிய நெற்றிக்கண் பொழிந்த 12 உருத்திராக்க மரமும், சந்திரரூபமாகிய இடக்கண் பொழிந்த நீரிலே 16 உருத்திராக்க மரமும், அக்கினி ரூபமாகிய நெற்றிக்கண் பொழிந்த நீரிலே 10 உருத்திராக்க மரமும் உதித்தன.  வலக்கண்ணினின்று கபிலநிற உருத்திராக்கமும்.  அதனின்று செந்நிற உருத்திராக்கமும், அதனின்று பொன்நிற உருத்திராக்கமும் தோன்றின.  இடக்கண்ணினின்று வெண்ணிற உருத்திராக்கமும் தோன்றிற்று. நெற்றிக்கண்ணினின்று கருநிற உருத்திராக்கமும் தோன்றிற்று.
 
    உருத்திரன் + அக்ஷம் (கண்) = உருத்திராக்க்ஷம்
(ஈண்டு வரும் உருத்திரன் மூவரில் ஒருவர் அன்று சுத்த மாயா புவனம் வரையுஞ் சஞ்சரிக்கும் மகாருத்திரர்)
 
    இயல்பான நேர்கோடுகளை முகம் என்று கணக்கிட்டு ஒன்று முதல் பதினாறு வரையுள்ள மணிகளை கண்டறிந்து அவைகளை அணியும் பலன்களையும் சைவ சமய நூல்கள் சிறப்பித்துச் சொல்லும்.
 
    சைவசமயிகள் சந்தியாவந்தனம், சிவமந்திர செபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலய தரிசனம், சிவ புராணம் படித்தல், சிவபுராணங்கேட்டல், சிரார்த்தம் முதலியவை செய்யும் காலங்களில் அவசியமாகியத் தரித்துக் கொள்ளல் வேண்டும். தரித்துக் கொள்ளாது இவை செய்தவருக்குப் பலன் அற்பம்.
 
    ஸ்நானம் செய்யும் போது உருத்திராக்க மணியிற்பட்டு வடியும் நீர் கங்கா நீருக்கு சமமாகும்.
 
    உருத்திராக்க மணியை பொன்னினாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்.
 
    பூணூல், குடுமியில் ஒரு மணியும், தலையில் இருப்பத்திரண்டு மணியும், காதுகளிலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், மார்ப்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.  பூணூலும், குடுமியும் ஒழிந்த மற்றைத் தானங்களிலே அவ்வத்தானங் கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகும்.  குடுமியிலும், பூணூலிலும், காதுகளிலும், கண்டத்திலும் (கண்டமணி) எப்போதும் தரிக்கலாம். மற்றையத் தானங்களில்  உள்ள மணியைச் சயனத்திலும், மலசலம் போகும் காலத்திலும், நோயுற்ற போதும் மற்றைய தீட்டு நாட்களிலும் தரித்தல் கூடாவாம்.
 
    எக்காலத்திலும் உருத்திராக்கம் தரித்தல் உத்தமம்.  அப்படி இல்லாவிடில் காலை, உச்சி, மாலை என்று சந்தியா காலத்தில் அவசியம் தரித்தல் வேண்டும்.  உருத்திராக்க மாலையை பட்டுப்பையில் சுற்றிப் பெட்டகத்தில் வைத்தல் வேண்டும்.
    இது வன்றி சிவமணி ஜெபம் செய்யும் பொருட்டு பயன்படுத்தப்படும். திருஐந்தெழுத்தை எண்ணும் பொழுது சிவமணி கையிற் கொண்டு ஒவ்வொரு மணியாக உருட்டுதல் வேண்டும். இதனை சிவம் செய்தல் என்பர்.  திருவைந்தெழுத்து ஜெபம் செய்ய வாய்ப்பாக 108 பொடி மணியாகவோ அல்லது 54 அல்லது 27 மணியாகவோ கோர்த்து நுனி இரண்டையும் ஒன்றாகக் கட்டி நாயக மணியை சேர்த்து கோத்து முடிக்க வேண்டும்.  அப்படி கோர்க்கும் போது 2 முக உருத்திராக்கமும், 12 முக உருத்திராக்கமும், 13 முக உருத்திராக்கமும் ஆகாது.  பல விதமாகிய முக உருத்திராக்கங்களையும் கலந்து கோர்த்தலும் கூடாவாம்.  மந்திரம் கணிக்கும் போது தூய வஸ்திரத்தால் ஜெபமாலையை மறைத்து உருத்திராக்கம் ஒன்று கொன்று உரசும் ஓசை கேட்காது உருட்டி ஜெபித்தல் வேண்டும்.  ஜெபிக்கும் போது மேரு மணியாகிய நாயக மணியை எண்ணில் சேர்க்காமல், துறவறத்தார் கீழாகவும், இல்லறத்தார் மேலாகவும் தள்ளக் கடவர்.
 
    உருத்திராக்க மணியாவது, மாலையாவது கீழே விழுந்தால் எடுத்து கண்களில் ஒற்றி நீரில் அபிசேகம் செய்து மலர் கொண்டு அருச்சித்து 108 முறை ஐந்தெழுத்து மந்திரம் ஜெபித்தல் வேண்டும்.  மாலைக் கயிறு அறுந்தாலும், தகாதவர் தீண்டி விட்டாலும் இப்படியே செய்க.  மாத விலக்குடைய பெண்கள் தீண்டி விட்டால் வேறு மாலையை கொள்ளுக.
    உருத்திராக்கம் தரிப்போர் யாவராயினும் சீவன் முத்தராவதோடு எல்லா புண்ணிய நதியில் மூழ்கிய பலனும், பல யாகங்கள் செய்த பலனும், பல புண்ணிய தலங்கள் சென்று தரிசித்த பலனும் கிட்டும்.  உருத்திராக்கப் பெயரை உச்சரிப்பினும், அதனைக் காணினும் தொட்டாலும், உட்கொண்டாலும் பேரின்பம் நல்கும்.  எனவே தான் ஆன்றோர்கள் ஒவ்வொருவரும் சந்திக்காலம் கிட்டும் போது கழுத்தில் சிவமணி தரிக்கச் செய்தனர்.  108 மணி மாலையை அணிந்து சிவாலய தரிசனம் செய்தால் ஆலயத்தினுள் நடக்கும் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு அசுவமேதயாகப் பலனைக் கொடுக்கும்.  சிவனடியார்க்கு சிவமணி மாலையை அல்லது சிவமணியை தானஞ் செய்வது மகா புண்ணியம் ஆகும்.
 
    உருத்திராக்கத்தின் முகங்கள் தேய்தலில்லாதனவாகவும் செயற்கை தயாரிப்பில்லாததாகவும், பிஞ்சாக இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.
    மிகவும் உயர்ந்ததான ஒரு முகமணியை சோதிக்க விரும்பின். ஒரு முகமணியை கீழே வைத்து அதன் மேல் எண்ணிக்கையில் எத்தனை ஆயிரம் மணிகளை குவிப்பினும் அந்த ஒரு முக மணியை கீழே வைத்து அதன் மேல் எண்ணிக்கையில் எத்தனை ஆயிரம் மணிகளை குவிப்பினும் அந்த ஒரு முக மணியை கீழே வைத்து அதன் மேல் எண்ணிக்கையில் எத்தனை ஆயிரம் மணிகளை குவிப்பினும் அந்த ஒரு முகமணி மட்டும் துருவி மேலே வந்து நிற்கும்.
 
முகமணி- அதிதேவதை-  யாருக்கு ப்ரீதி  பலன்-  சிறப்புப் பலன்
 
1 -தற்பரமசிவன் -சிவன்- பிரமகத்தி நிவர்த்தி மனோதிடத்தை வளர்க்கும்
2- ஸ்ரீ கண்ட பரமசிவன் -சிவசக்தி- கோகத்தி நிவர்த்தி இச்சைகளைக் கட்டுப்படுத்தும்
3- அக்னி தேவன்- மும்மூர்த்தி- ஸ்திரீ ஹத்தி நிவர்த்தி வேலைக் கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்
4 -பிரம்மா -பிரம்மா -நரஹத்தி நிவர்த்தி சித்தப்பிரமைப் போக்கும்
5- காலாக்கினி -ருத்ரர் சதாசிவம்- புணர்தற் பாலரல்லாதாரை புணர்ந்த பாவமும் விலக்கப் பட்டவைகளை புசித்த பாவமும் நிவர்த்தி இருதய நோயைக் குணப்படுத்தும்
6 -சுப்பிரமணியர் -ஆறுமுகர் -பிரமஹத்தி நிவர்த்தி மயக்கம் இரத்த அழுத்தம் ஆகியவற்றை நீக்கும்
7 -ஆதிசேடன் -சத்தமாதர்- கோகத்தி, பொற்களவுப் பாவ நிவர்த்தி ஆயுளை அதிகரிக்கும்
8 -விநாயகர்- அட்ட வித்தியேசுரர்- குருபத்னியை புணர்ந்த பாவம், தானம் ஏற்ற பாவம் பிறரன்னம் கவர்ந்துண்ட பாவம் நிவர்த்தி செல்வத்தை ஈட்டும்
9 -வைரவர்- நவதீர்த்தங்கள் -பல பிராணகத்தி, 100 பிரம்மஹத்தி நிவர்த்தி, பூதம், பிசாசும், சர்ப்ப விக்கினங்கள் விலக அட்டமாசித்தி கைகூடும் முக்திக்கு வழிகாட்டும், இருதய் பலவீனத்தைக் குணப்படுத்தும்
10- விட்டுணு-  திக்கு பாலகர்கள்- நாள், கோள், பேய், பூதம், பிரம்மராக்கத தீமை விலகல் இருமலைக் குணப்படுத்தும்
11 -பதினொரு ருத்திரர்கள்- 11 ருத்திரர்கள் -ஆயிர அசுவமேத யாக பயனும் 100 வாச பேய பலத்தையும் லட்ச கோதான பலமும் தரும் தீவிரத் தொற்று நோய்களை நீக்கும்
12- பன்னிரெண்டாதித்தர்- விட்டுணு முதலிய 12 தேவர்கள்- கோதான பலமும், அசுவமேத பலமும் பொன் தான் பலமும் கிடைக்கும் இந்திரியப் பலத்தை வலுப்படுத்தும்
13 -சுப்பிரமணியர் -சதருத்ரர் -சர்வா பீஷ்டத்தையும் சர்வ சித்தியையும் கொடுக்கும். மாதா, பிதா, சகோதரர், புத்திரர், கொலை கருவைக் கலைத்த பாவம் நீக்கும் ஞானத்தை தரும்
14- சிவமும் சக்தியும்- அசுவினி தேவர்- அட்ட பசுக்கள் தேவமுனிவர் எல்லோரையும் வசப்படுத்தி சிவபதம் கொடுக்கும் உடல் தேஜஸையும், உள்ளத்தின் ஒளியையும் பெருக்கி சிறந்த ஞானியாக்கும்
15- சதாசிவம்- சந்திரன், வருணன் முதலிய தேவர்கள் -சகல பாவ நிவர்த்தி  
16 -அனந்த தேவர்- பிரம விஷ்ணு ருத்ரர் மற்றும் 33 கோடி தேவர்கள் -சாயுஜய பேறு கிட்டும்  
 
        இத்துணை பெருமைமிக்க உருத்திராக்கத்தை சிவமாகப் பாவித்து அபிசேகம் செய்து மலர் சாத்தி பூஜை புரிதல் மிகவும் விசேடமாகும்.  உருத்திராக்கம் தரிப்போரை உண்பித்தால் சிவபெருமானை உண்பித்த பலனும். உருத்திராக்கம் அணிந்தவரை இகழ்ந்தால் சிவநிந்தனை செய்த பாவத்தையும் ஏற்பர்.  எனவே நாமும் கூசாது எக்காலத்தும் உருத்திராக்கம் அணிதல் வேண்டும்.  அணிந்தோரை சிவமாகப் பாவித்து வணங்கிப் போற்றவும் வேண்டும்.
 
    "தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும்
     நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப்
     பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்
    மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே"
    தாழ்வடம் - கண்மணிமாலை; உருத்திராக்கம்
    "சுந்த மென்மலர்த் தாதணி நீறுமெய் தரித்துக்
    கந்த மேவுவண் டொழுங்கெனும் கண்டிகை பூண்டு
    சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத
    மந்த சாரியின் மணங்கொணர்ந் தெழுந்தது மருந்து"